
லே: யூனியன் பிரதேசமான லடாக்-குக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே-யில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு (Leh Apex Body-LAB), கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட 15 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சோனம் வாங்சுக் உள்ளிட்ட இருவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் இருவரும் நேற்று (செப். 23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.