
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது.
ராமதாஸ் அனுமதி இல்லாமல், அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, ராமதாஸிற்கு நாற்காலி ஒன்று போடப்பட்டது, பாமக தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது, தைலாபுரத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகேயே ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணியை தலைவர் பதவியில் இருந்தும், கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராமதாஸ் நீக்கி விட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், “நான் 46 வருஷம் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் இன்றைக்குச் சில கும்பல், நாங்கள்தான் பாமக என்று கட்சியைக் கெடுக்க நினைக்கிறார்கள். பொய், பொய்யாகப் பேசிய அன்புமணியின் வேஷம் கலைந்துவிட்டது.
பாமகவிற்கு எதிராகச் செயல்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. எப்போது அவர்களை கட்சியை விட்டு நீக்கினோமோ, அன்றைக்கே அவர்களின் வேஷம் கலைந்துவிட்டது.
அன்புமணி தரப்பு போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்று வந்துள்ளதாக ராமதாஸ் குற்றச்சாட்டினார். போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அப்போது, “பீஹாரில் மாம்பழ சின்னத்தில் பாமக போட்டியிடுவதாகச் சொல்கிறார்கள்” என்று நிரூபர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், “தென்கொரியா, ஜப்பான், மொரிஷியஸ் தீவில்கூட மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவார்கள்” என்று நையாண்டியாகப் பேசியிருக்கிறார்.