
நடந்துமுடிந்த 71வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர் விக்ராந்த் மாஸ்ஸி.
12த் ஃபெயில் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த மனோஜ் குமார் ஷர்மா என்ற கதாபாத்திரத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது. 12த் ஃபெயில் நாடு முழுவதும் இளைஞர்களாலும் சினிமா ரசிகர்களாலும் விரும்பப்பட்ட திரைப்படம்.
மகேஷ் குமார் ஒரு சாதாரண கிராமப்புற மாணவனாக இருந்து இந்திய பொது சேவை ஆணையத்தில் (IPS) அதிகாரியாக உயர்ந்த கதைதான் 12த் ஃபெயில். கற்பனையில் மட்டுமே காண முடிகிற ஓர் இலக்கை சென்றடையும் பயணம்.
யார் இந்த Vikrant Massey?
அப்படிப்பட்ட ஒரு பயணம் தான் விக்ராந்த் மாஸ்ஸியுடையதும். அவர், மும்பை கமத்திபுராவில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறார், பண தேவைக்காக காபி கடையில் வேலை செய்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையின் எந்த நிலையிலும் அவரது கனவிலும் ஒரு கண் வைத்திருந்தார்.
சிறுவயதிலிருந்தே நடிப்பிலும் நடனத்திலும் ஆர்வத்துடன் இருந்த விக்ரந்த் மாஸ்ஸிக்கு 2007ம் ஆண்டு அவரது நடனத்திறமையால் தூம் மாச்சோ தூம் என்ற பதின் பருவத்தினர் இசை-நாடகத் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு தரம் வீர், பாலிகா வது உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு எபிசோடுக்கு 6000 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று நடித்தார்.
தொலைக்காட்சி உலகில் அனைவராலும் அறியப்படும் கலைஞராக வளர்ந்த பிறகு, 2013-இல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய லூதேரா படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் எல்லாமும் சின்ன சின்ன பாத்திரங்கள். தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு சரியான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தார்.
மிர்சாபூர் வலைத்தொடரில் அவர் ஏற்றிருந்த பப்லு பண்டிட் பாத்திரம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. பத்தோடு பதினென்றாக இல்லாமல் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.
வெற்றியின் அந்த தருணம்…!
12த் ஃபெயில் மொத்தமாக அவரை மாற்றியது. நாடுமுழுவதும் ரசிகர்கள் அடையாளம் காணும் ஹீரோவாக உருவாகியிருந்தார். தற்போது அவரது நீண்ட நாள் உழைப்புக்கு ஊதியமாக 12த் ஃபெயில் படத்துக்காக தேசிய விருதும் பெற்ருள்ளார்.
“தேசிய விருதைப் பெற்றது என் வாழ்க்கையில் பெருமையான தருணம். ஒரு காலத்தில் ஓர் 20 வயது பையனின் கற்பனைக் கனவாக இருந்தது இது. அது நிறைவேறி கையில் கிடைப்பதைப் பார்ப்பது சாதாரணமாகவும் கொஞ்சம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.” என அந்தத் தருணம் குறித்து நெகிழ்ந்தார்.
கடுமையாக உழைக்கும், விடா முயற்சியுடன் ஓடும், தைரியமாக கனவுகாணும் கலைஞர்களுக்கு விக்ராந்த மாஸ்ஸியின் வெற்றி ஓர் ஊக்கம்.