
எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைக் கண்டித்தும், வரலாற்றுத் தகவல் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆட்டுச் சந்தை வளாகத்தில் எட்டயபுரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சைதன்ய ராஜா தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள், வணிகர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சைதன்ய ராஜா பேசுகையில், ”தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும் வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எட்டயபுரம் சமஸ்தானம்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப்புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் போன்ற வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எட்டயபுரம்.
சினிமாவில் பேசியதை வைத்துக் கொண்டு வரலாற்று உண்மை தெரியாமல் சிலர் பேசி வருவதால் கடந்த 2 தலைமுறைகளாகப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். முதலில் சினிமாதானே என்று விட்டது பின்னாளில் இவ்வளவு தாக்கம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
சிலர் இன்றைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதை இணைத்துப் பேசும் நிலை உள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். வரலாறு தவறாகக் கூறப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில் பல ஆதாரங்கள் அரசின் ஆவணக் காப்பகத்தில் உள்ளன.

அந்தச் சமயத்தில் என்ன நடந்து.. ஆங்கில அதிகாரிகளுக்கு இடையிலான உரையாடல் எல்லாமே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம் சமஸ்தானத்தின் வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் பல விஷயங்கள் உள்ளன. அதை எடுத்துப் பார்த்தால் உண்மையான வரலாறு தெரியும்.
இந்தத் தவறான தகவலை பாடப் புத்தகத்திலிருந்து நீக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். தமிழக அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.