• September 24, 2025
  • NewsEditor
  • 0

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் `நாடோடிகள்’ பட நடிகை சாந்தினி புகார் கூறியிருந்தார்.

நடிகை சாந்தினி

இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு மணிகண்டன் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த அவரை பெங்களூரில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து நடிகை சாந்தினி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

3 ஆண்டுகளுக்கு பின் நேற்று இந்த மனு நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், கடந்த 2022ம் ஆண்டில் இந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மணிகண்டன் மீது பதிவு செய்திருந்த வழக்கினை ரத்து செய்ததாகவும் கூறினார்.

இதனை மறுத்த நடிகை சாந்தினியின் வழக்கறிஞர், பாலியல் குற்ற வழக்குகளில் சமரசம் கிடையாது. அப்படி சமரசம் ஏதும் செய்து கொள்ளவில்லை என்றார். இதனை கேட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனுதாரர் தரப்பு ஏன் அப்போதே மனு தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதுடன் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக சாந்தினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும் நடிகை சாந்தினி தொடர்ந்த இந்த வழக்கானது கடந்த 3 ஆண்டுகளாக ஏன் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்ற பதிவாளர் விளக்க அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இந்நிலையில் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி தொடர்ந்த ஜாமீன் வழக்கினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அவருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாக அவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *