
தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன.
கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த ஹெச்-1பி விசாவில் அதிக திறன் பெற்ற அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த விசா மூலம் அமெரிக்கா செல்லும் 67 சதவிகிதத்தினர் இந்தியர்கள், 11 சதவிகிதத்தினர் சீனர்கள், மீதி உள்ள சதவிகிதத்தினர் தான் பிற நாட்டினர்.
இதனால், இந்தியர்கள் பெருமளவில் பாதிக்க உள்ளனர்.
இனி மீண்டும் ஹெச்-1பி விசாவில் புதிய மாற்றம் ஒன்றை பரிந்துரைத்துள்ளது அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை.
இதுவரை, ஹெச்-1பி விசா லாட்டரி நடைமுறை மூலம் ஒதுக்கப்பட்டு வந்தன. இதை மாற்றி இனி ஹெச்-1பி விசாக்கள் ‘Weighed’ தேர்வு முறையில் வழங்கப்பட உள்ளது.
ஹெச்-1பி விசா லாட்டரி நடைமுறை என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் இத்தனை பேருக்கு தான் ஹெச்-1பி விசா வழங்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை உண்டு. ஆனால், இந்த எண்ணிக்கைக்கும் மேல் தான் வழக்கமாக விசா விண்ணப்பங்கள் வந்து குவியும்.
அதனால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு விசாக்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படும்.
அது தான் இப்போது மாற்றப்பட உள்ளது.

இனி எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
இனி ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்கள் அவர்களது ஊதியங்களுக்கு ஏற்ப நான்கு நிலைகளாக பிரிக்கப்படும்.
பின், நிலை 1 (குறைந்த சம்பளம்)-ல், விசாக்கள் குறைவான எண்ணிக்கையில் தான் கிடைக்கும்.
நிலை 2 (சற்று அதிக சம்பளம்)-ல், விசாக்கள் சற்று அதிக எண்ணிக்கையில் கிடைக்கும்.
நிலை 3 (அதிக சம்பளம்)-ல், அதிக விசாக்கள் கிடைக்கும்.
நிலை 4 (மிக அதிக சம்பளம்)-ல், மிக அதிக எண்ணிக்கையில் விசாக்கள் கிடைக்கும்.
இந்த நடைமுறையில் அதிக சம்பளம் பெறும் நிலை 3 மற்றும் 4-ஐ சேர்ந்தவர்கள் விசா பெறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.
இதன் மூலம், மிகக் குறைந்த ஊதியப் பிரிவில், ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தான் இந்த நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளது அமெரிக்க அரசு.