
நாட்டில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். தென்னிந்திய யானை வழித்தடங்களின் இதயம் என்று அழைக்கப்படும் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் யானை – மனித எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது.
இந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தனியார் பெருந்தோட்டங்களின் செயல்பாடுகளால் யானைகளின் வழித்தடங்களில் சிதைவு ஏற்பட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி யானைகள் நகர்வதாக ஆய்வாளர்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் என உள்ளூர் மக்களால் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த ஆண் யானை ஒன்று தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வருவதாகவும் அந்த யானையை இங்கிருந்து பிடித்துச் செல்ல வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
அந்த யானையைப் பிடிக்க வனத்துறை உத்தரவிட்டது. 4 கும்கி யானைகளைக் களத்தில் இறக்கி நூற்றுக்கணக்கான வனப்பணியாளர்கள் அந்த யானையைப் பிடிக்கும் பணியில் ஓவேலி, எல்லமலை பகுதியில் முகாமிட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வாரமாக இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மயக்க ஊசி செலுத்தி அந்த யானையைப் பிடித்துள்ளனர். பின்னர் அந்த யானையை வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் யானைகள் முகாம் மரக்கூண்டில் அடைத்துள்ளனர். யானையின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறையினர், “ஓவேலி பகுதியில் நடமாடி வந்த சுமார் 40 வயதான ஆண் யானை ஒன்று பிரச்னைக்குரிய யானையாக அறியப்படுகிறது. மக்களின் நலன் கருதி அந்த யானையை அங்கிருந்து அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எல்லமலை பகுதியில் நடமாடி வந்த அந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். நேற்று நண்பகல் வாக்கில் கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

அரை மயக்கத்தில் நின்ற யானையை கும்கிகள் மற்றும் பாகர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இரவோடு இரவாக முதுமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு க்ரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு க்ராலுக்குள் வைத்து யானையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதன் பின்னரே இந்த யானையை விடுவிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என்றனர்.
ஓவேலி பகுதியில் யானைகளுக்கு ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகள் குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனச் சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.