
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் வெளியேறல், முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் என தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சலசலப்புகள் நீடித்து வருகின்றன.
இந்தப் பரபரப்பான சூழலில்தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, “உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, தேசத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கடிதம் அளித்தோம்.
கூட்டணி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷா தெளிவாகக் கூறிவிட்டார். நானும் தெளிவுபடுத்திவிட்டேன்,” என்றார்.
ஆனால், இந்தச் சந்திப்பில் உள்கட்சி விவகாரங்கள் குறித்து ஆழமாகப் பேசப்பட்டதாகவே அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
‘அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும்’ என, அமித் ஷா வலியுறுத்தியதாகவும், ஆனால் எடப்பாடி இதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பரபரப்பான சூழலில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அமித் ஷா அவசரமாக டெல்லிக்கு அழைத்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து விவரமறிந்தவர்கள் கூறுகையில், “அமித் ஷா முதலில் பேசத் தொடங்கி, ‘கடந்த தேர்தலில் உங்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னைகளால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
வரவிருக்கும் தேர்தல் மிகவும் முக்கியமானது. அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணிக்குள் பல பிரச்னைகள் உள்ளன. இதைச் சரிசெய்யவே உங்களைத் தலைவராக நியமித்தோம்.
நேரம் மிகக் குறைவு, எனவே கூட்டணியை உடனடியாக பலப்படுத்தும் பணிகளைத் தொடங்குங்கள்,’ என்று தெளிவாகக் கூறினார்,” என்றனர்.
இதற்கு பதிலளித்த நயினார், “முடிந்தவரை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அண்ணாமலையின் சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் தெரிவித்தேன்,” என்று கூறியதாகச் சொல்கிறார்கள்.

இதையடுத்துதான், நயினார் எடப்பாடியின் இல்லத்திற்குச் சென்று, “எனது சுற்றுப்பயணத் தொடக்க விழாவிற்கு வர வேண்டும். அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைமை விரும்புகிறது,” என்று நயினார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எடப்பாடி, “சுற்றுப்பயணத்திற்கு வர முயற்சிக்கிறேன். அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்கள் குறித்து டெல்லியில் பேச வேண்டியவற்றைப் பேசிவிட்டேன். இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பின்னர், நயினார், “பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கூட்டணி பலமாகும்,” என்று கூறியதற்கு,
எடப்பாடி, “பா.ம.க.வின் மூத்த தலைவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன், அதில் பிரச்னை இல்லை. தே.மு.தி.க.விற்கு ஒரு எம்.பி. தொகுதி ஒதுக்க வேண்டும், அதையும் பேசி முடிவு செய்யலாம்,” என்று பதிலளித்ததாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அடுத்தடுத்த சந்திப்புகளால் கமலாலயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நயினார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னணி குறித்து பேசும் கமலாலய சீனியர்கள் சிலர், இந்தச் சந்திப்பு நட்டாவின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, “தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டணியின் நிலை, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து நயினார் விவாதித்திருக்கிறார்.

தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு விழாவை சென்னையில் நடத்த உள்ளோம், அதில் நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
மேலும், கட்சிக்குள் தனக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் விவரித்திருக்கிறார்.
இதற்கு நட்டா, “வெற்றி பெறுவதே நமது ஒரே இலக்கு. அதற்குத் தேவையான அனைத்தையும் செய்யுங்கள். முதலில் கூட்டணியைப் பலப்படுத்தும் பணிகளை முன்னெடுங்கள். உங்களுக்குத் தேவையான முழு ஆதரவையும் பா.ஜ.க. அகில இந்தியத் தலைமை வழங்கும்,” என்று உறுதியளித்திருக்கிறார்” என்றனர்.