
Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதாகிறது. அவனுக்கு குரல் மிக மென்மையாக, பெண் தன்மையுடன் இருக்கிறது. இதனால் நண்பர்கள் மத்தியில் கிண்டல், கேலிக்கு உள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். இதை சிகிச்சையில் சரி செய்ய முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
பியூபர்ஃபோனியா (Puberphonia)
ஒருவரின் குரலின் தன்மை என்பது அவரது குரல் நாணின் நீளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மகனுக்கு இருப்பதாகச் சொல்லும் இந்தப் பிரச்னைக்கு மருத்துவத்தில் ‘பியூபர்ஃபோனியா’ (Puberphonia) என்று பெயர். இந்தப் பிரச்னைக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் தீர்வும் இருக்கிறது.
சிகிச்சை
ஸ்பீச் தெரபியோ, அறுவை சிகிச்சையோ கொடுக்கப்பட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். சிகிச்சையைத் தொடங்கும்முன், எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து, குரல் நாணின் நிலை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள, வேறு சில டெஸ்ட்டுகளும் மேற்கொள்ளப்பட வேண்டி வரலாம்.
டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டை பொறுத்துதான் எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும்.
பெண்ணாக இருந்து குரலில் ஆண்தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.

ஸ்பீச் தெரபி
தியேட்டர் போன்று நடிப்புத் துறைகளில் உள்ள பலரும் தங்கள் குரல் வளத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்பீச் தெரபி எடுப்பதைப் பார்க்கலாம்.
சரியான நேரத்தில், சரியான மருத்துவரை சந்தித்து, சரியான சிகிச்சையை எடுத்தால் 3 முதல் 6 மாதங்களுக்குள் சிகிச்சையின் பலனை உணர முடியும்.
சிலருக்கு ஸ்பீச் தெரபி பலனளிக்காமலும் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நீளத்தைச் சரிசெய்வதன் மூலம் குரலின் தன்மையையும் மாற்ற முடியும்.
தன்னம்பிக்கை
இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் மகனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசுங்கள். குரல் மட்டுமே ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் விஷயமல்ல என புரிய வையுங்கள். தேவைப்பட்டால் கவுன்சலிங் அழைத்துச் செல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.