
சென்னை: பாஜக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வலியுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா காலமானதையொட்டி, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரிடம் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் அரசியல் களம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் பேசினேன். திமுக கூட்டணியை வீழ்த்த தேசிய ஜனநாய கூட்டணியால் மட்டுமே முடியும். எனவே என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரையும் சந்திக்க உள்ளேன். அவரின் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் சந்திப்பேன்.