
எங்களுக்கு இரண்டு மகன்கள். இருவரும் படிப்பை முடித்து வேலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். நாங்கள் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். எங்கள் மூத்த மகனின் திருமணம், எங்கள் மரியாதை, சந்தோஷம், நிம்மதி என அனைத்தையும் பறித்துப்போட்டு விட்டது. எங்கள் வீடே இப்போது சூன்யமாக உள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன், எங்கள் மூத்த மகனுக்குப் பெண் பார்த்தோம். மேட்ரிமோனி மூலம் ஒரு பெண் வீடு அமைந்தது. அவர்களும் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். பெண் பார்க்கச் சென்றபோது, எங்கள் இரண்டு குடும்பங் களுக்கும் பரஸ்பரம் பிடித்திருந்தது. குறிப்பாக, பெண்ணுக்குப் பையனையும் பையனுக்குப் பெண்ணையும் பிடித் திருந்தது.
திருமணம், ரிசப்ஷன் எல்லாம் ஜோராக முடிந்தது. மருமகளை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு, அவர் பெற்றோர் ஊருக்குத் திரும்பினர். ஒரே வாரத்தில் எங்கள் மருமகள், தன் அப்பா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றார். பிறந்த வீட்டை பிரிந்ததால் அப்படிச் செல் கிறார் என்று நினைத்தோம். `கிட்டத்தட்ட 500 கி.மீ தூரம். நினைச்சதும் போக முடியுமா? அவனுக்கு ஆபீஸ் இருக்கு இல்ல… ஒரு வாரம் கழிச்சு உங்களை குல தெய்வம் கோயிலுக்குப் போக வரச் சொல்லியிருக்காங்க இல்ல, அப்போ போகலாம்மா’ என்றோம். ஆனால், அவர் பிடிவாதமாக சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க, அது விநோதமாக இருந்தது.
மருமகள், தன் பெற்றோருக்கும் போன் செய்து, உடனே வந்து தன்னை அழைத்துச் செல்லும்படிச் சொல்ல, அவர்களும் மறுநாளே வந்தனர். அப்போது, பெற்றோருக்கும் மருமகளுக்கும் பயங்கரமான வாக்குவாதம், சண்டை ஏற்பட்டது.
`உன் பிரச்னை முடிஞ்சிடுச்சுனு நினைச்சோம், இப்படி எங்களை அவமானப்படுத்துறியே’ என்றெல்லாம் அவர்கள் மருமகளைத் திட்ட, எங்களுக்கு ஒன்றும் புரியாமல், அதிர்ச்சியாகிப் பார்த்தோம். இறுதியில் அவர்கள், தங்கள் மகளைத் தங்களுடனேயே அழைத்துச் சென்றனர். சில நாள்களில் அனுப்பி வைப்பதாகக் கூறினர்.
எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. மகனிடம் விசாரித்தபோது, `ஒரு வாரமா அந்தப் பொண்ணு என்கிட்ட முகம் கொடுத்துப் பேசக்கூட இல்ல. எங்களுக்குள்ள எதுவும் நடக்கல. ஏதோ பிரச்னைனு நினைக்கிறேன்’ என்றான். நாங்கள், பெண்ணின் ஊரைச் சேர்ந்த, எங்கள் உறவினருக்கு உறவினர் மூலமாக விசாரித்த போதுதான்… இடி விழுந்ததுபோல அந்த விஷயம் பற்றி தெரியவந்தது.
அந்தப் பெண், ஒருவரை காதலித்திருக் கிறார். பெற்றோர் அவர் மனதை மாற்றி, வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி அவரை திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்துள்ளனர். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் எங்கள் வீட்டிலிருந்து பிடிவாதம் பிடித்து அவர் வீட்டுக்குச் சென்றவர்… எங்கள் மகனுடன் வாழ முடியாது என்றும், காதலனுடன்தான் வாழ்வேன் என்றும் அடம்பிடித்தவர்… ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதலுடனேயே சென்றுவிட்டதாக எங்களுக்குச் சொல்லப்பட்டது.
இதைக் கேள்விப்பட்டதும் அதிர்ந்து போன நாங்கள் பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்தால், எடுக்கவே இல்லை. நானும் கணவரும் நேராகவே கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்றபோதுதான்… நடந்தவற்றை எல்லாம் ஒப்புக்கொண்டனர்.
`பொண்ணு பார்க்க வந்தப்போ, மாப்பிள்ளை பிடிச்சிருக்கானு கேட்டப்போ, பிடிச்சிருக்குனுதானே உங்க பொண்ணு சொன்னுச்சு? கல்யாணத்துக்கு முன்னாடி எங்க பையன் போன்ல பேசினப்போகூட பேசுச்சே…’ என்றெல்லாம் நாங்கள் கோபப்பட, ‘எல்லாமே எங்க வற்புறுத்தலால தான். கல்யாணம் ஆனா சரியாகிடும்னு நினைச்சோம். இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல’ என்றனர்.
என்ன செய்வதென்றே தெரியாமல், எங்கள் மகனுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் வீடுவந்து சேர்ந்தோம். தொடர்ந்து, என் மகன் மிகவும் உடைந்து போனான். நண்பர்கள், உறவினர்கள், அலுவலகம் என மனிதர்களை எதிர்கொள்ள அவமானமாக உணர்ந்தான். ஒரு கட்டத்தில் வேலையையே விட்டுவிட்டான். வெளி மாநிலத்தில் வேலை தேடிக்கொண்டு சென்றுவிட்டான்.
இதற்கிடையிலோ, `அந்தப் பெண்ணையும் அவர் காதலரையும் பெண் வீட்டினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர், அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறார்’ என்ற செய்தியையெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டு… நொந்துபோனோம். இதே தைரியத்துடன் கல்யாணத்துக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறி அந்தப் பெண் தன் காதலருடன் சென்றிருந்தால் அல்லது இப்போது ஏற்றுக்கொண்டதுபோல முன்னரே தங்கள் பெண்ணின் காதலை அவர் பெற்றோர் ஏற்றிருந்தால்… எங்கள் மகனின் வாழ்க்கை இப்படி பாழ்பட்டிருக்காதே.
இப்போது, எங்கள் மகனுக்கு நாங்கள் மீண்டும் திருமணத்துக்குப் பெண் பார்க்கிறோம். ‘முதல் கல்யாணத்துல என்ன ஆச்சு?’ என்ற கேள்வி, எங்களை விடாமல் துரத்துகிறது. ‘ரெண்டாவது கல்யாணமா..?’ என்று எங்கள் பையன் பல இடங்களிலும் நிராகரிக்கப்படுவது முதல், ‘பையனுக்கு உடலளவுல ஏதாச்சும் பிரச்னையா தெரியலையே…’ என்று சந்தேகிக்கப்படுவது வரை… நாங்கள் மனவேதனையில் நொறுங்கும்படியான நிகழ்வுகளை எதிர் கொள்கிறோம்.
எங்கள் மகனோ வெறுத்துப்போய், ‘எனக்குக் கல்யாணமே வேண்டாம், தயவு செஞ்சு விட்டுடுங்க. தம்பிக்குப் பெண் பாருங்க’ என்கிறான் விரக்தியின் உச்சத்தில்.
திருமணத்தால் பாழான மகன் வாழ்க்கையை எப்படிச் சரி செய்வது?
குறிப்பு: சில அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன.
(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்டில் தெரிவிக்கலாம்)