
சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள திரையரங்கின் லிஃப்டில் சிக்கி ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார். ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கின் பராமரிப்பு லிஃப்ட்டில் இன்று காலை இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திரையரங்கில் உள்ள ப்ரொஜெக்டரை சுத்தம் செய்வதற்காக, பராமரிப்பு லிஃப்ட்டை பயன்படுத்திய ஊழியர் ஒருவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவரால் லிஃப்ட்டிலிருந்து வெளியே வரமுடியாத நிலையில் ஏற்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு வருவதற்குள் அந்த ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து சக ஊழியர்கள், லிஃப்ட் முறையாக பராமரிப்பதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாகவும் அதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.