
71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக் கான், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்’ பட இயக்குநர் ராம் குமார் என விருது அறிவிக்கப்பட்ட அனைவரும் இந்த நிகழ்வில் பெரு மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு விருது பெற்றனர்.
விருது பெற்றப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஜி.வி. பிரகாஷும், நடிகை ஊர்வசியும் பேசியிருக்கிறார்கள்.
ஊர்வசி பேசும்போது, “ரொம்பவே சந்தோஷமான தருணமிது. இரண்டாவது முறையாக தேசிய விருது எனக்கு கிடைத்திருக்கு.
அப்போது எனக்கு விருது வழங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும், இப்போது விருது வழங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் என் நன்றிகள்.
இரண்டு பெண்களிடமிருந்து விருது வாங்கியிருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். மோகன் லால் சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி.” என்றார்.
ஜி.வி. பிரகாஷ், “71-வது தேசிய விருதுகளில் எனக்கும் விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
இது என்னுடைய இரண்டாவது நேஷனல் அவார்ட்.
கடந்த முறை, சிறந்த பின்னணி இசை பிரிவில் சூரரைப் போற்று’ படத்திற்கு வாங்கியிருந்தேன்.
இந்த முறை சிறந்த பாடல்களுக்கான பிரிவில் வாத்தி’ படத்திற்காக வாங்கியிருக்கேன்.

அந்தப் படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் ஹிட்டாகியிருந்தது.
கமர்ஷியலாகவும் பெரிய அளவில் போய், விமர்சகர்களுக்கு அந்தப் பாடல்கள் பிடித்திருப்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும், `வாத்தி’ படத்தின் தயாரிப்பாளருக்கும், தனுஷுக்கும் என் நன்றிகள்.” எனப் பேசியிருக்கிறார்.