• September 23, 2025
  • NewsEditor
  • 0

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார்கள் வரை பலவற்றின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.

5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவிகிதம் என இரு அடுக்குகளாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விகிதம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின் சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது.

சோம வள்ளியப்பன்

சிக்கலில் அரசுகள்?

அதே நேரம், மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்திருப்பதால், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் குறையும் எனவும், இதனால், மத்திய அரசு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிதியும் குறையும் எனவும் கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பாக விளக்கம் கேட்க நிதி ஆலோசகரும், நிபுணருமான சோம வள்ளியப்பனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அதிகாரப் பகிர்வுக்கான அமைப்பு. நம் அரசியலமைப்பின்படி நேரடி வரிகளை மத்திய அரசும், மறைமுக வரிகளில் சிலவற்றை மாநில அரசுகளும் விதிக்கலாம்.

ஜிஎஸ்டி கவுன்சில்:

இந்த சட்டத்தைத் திருத்தி 2016-ல் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, மத்திய – மாநில அரசுகளின் பல வரிகளையும் ஜி.எஸ்.டி கவுன்சில் என்ற அமைப்பின் கீழ் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டது.

இந்த அமைப்பில் மாநில கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கும், மத்திய அமைச்சர்கள் மூன்றில் ஒரு பங்கும் வாக்களிக்கும் பலம் கொடுக்கப்பட்டது.

எனவே, இந்த ஜி.எஸ்.டி கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகள் வாக்குகளின் அடிப்படையில் அமையும்.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

புதிய ஜிஎஸ்டி வரி:

ஆனால் இதுவரை ஜி.எஸ்.டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட எந்த முடிவும், வாக்கெடுப்புக்குச் செல்லாமல், அனைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் இந்த ஜிஎஸ்டி வரியும் ஒன்று.

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தும்போதுகூட, ‘புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு மத்திய அரசின் செஸ் வரியின் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு நிவாரணம் வழங்கப்படும்’ என மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

அதன் அடிப்படையில் சில மாநிலங்களுக்கு நிவாரணத்தையும் வழங்கியது. இந்த நிலையில்தான் மீண்டும் ஜி.எஸ்.டி கவுன்சில், ஜி.எஸ்.டி வரி குறைப்பு நடவடிக்கையை கொண்டுவந்திருக்கிறது.

அரசுகளுக்கு நஷ்டம்?

இந்த வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஏறத்தாழ ரூ.44,000 கோடி வருவாய் இழப்பும், அனைத்து மாநில அரசுகளுக்கும் ரூ.44,000 கோடி வருவாய் இழப்பும் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம், ஜி.எஸ்.டி வரி குறைப்பால் வியாபாரம் அதிகரிக்கும். அதன் மூலம் வரும் வருவாய், மத்திய – மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பைவிட கூடுதலாக இருக்கும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

GST
GST

வருவாய் கூடும்:

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் டிவி, ப்ரிட்ஜ், பைக், கார் போன்றவையின் விலை குறைந்திருப்பதால், வியாபாரம் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இன்னும் போகப் போக வியாபாரம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், தமிழ்நாட்டில் நுகர்வும் அதிகம் என்பதால், உற்பத்தியின் அளவும் அதிகரிக்கும்.

அதனால் மாநில அரசின் வருவாய்க்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவே, இந்த வரி குறைப்பாலும், வரிகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வதாலும் மக்களுக்கு மட்டுமல்ல, மத்திய – மாநில அரசுகளுக்கும் லாபம்தான்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *