• September 23, 2025
  • NewsEditor
  • 0

ரோபோ சங்கர் மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘யார் வீட்டு விசேஷம்னாலும் முதல் ஆளா வந்து நிப்பார். தன் வீட்டு வேலை மாதிரி எல்லாத்தையும் கவனிப்பார். அவருடைய அந்த குணத்துக்காகவே டிவியில் அவருடைய நட்பு வட்டம் பெருசு’ என்கிறார்கள்.

அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டுமென்பதற்காகவே தன் வெளிநாட்டு நிகழ்ச்சியைப் பாதியில் முடித்து விட்டுத் திரும்பியிருக்கிறார் சாய் சக்தி.

அவரிடம் பேசினோம்.

சாய் சக்தி

பர்சனல் பேச ஒருத்தரா இருந்தார்!

”நான் டிவியில் நுழைஞ்ச காலத்துல இருந்தே அவரைத் தெரியும். நிறைய டிவி நிகழ்ச்சிகள்ல அவர் கூட ஒர்க் பண்ணியிருக்கேன். ஜாலியா கலாய்ப்பார். அதேநேரம் ஒரு அண்ணனா அன்பு காட்டுவார். பர்சனல் பிரச்னைன்னா அவர்கிட்ட சொன்னா அதை சரிசெய்ய யோசனை சொல்வார். டிவி ஏரியாவை ஒரே குடும்பமாத்தான் பார்த்தார். நானும் அவரும் நிறைய வெளிநாடுகளுக்கு சேர்ந்து போயிருக்கோம். அந்த நினைவுகள்லாம் மறக்கவே முடியாது..

கடந்த வாரம் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் நாடுகள்ல ஒரு நிகழ்ச்சிக்காகக் கிளம்பிப் போனேன். போய் ரெண்டே நாள்ல அவருடைய மறைவு செய்தி. கேட்ட பிறகு என்னால நிகழ்ச்சியைத் தொடர முடியல. கடைசியா ஒரு தடவை அவர் முகத்தைப் பார்க்கணும்கிறதுக்காகவே ஏற்பாட்டளர்கள்கிட்டப் பேசினேன். என் நிலைமையைப் புரிஞ்சுகிட்டு சம்மதிச்சாங்க. சரியான நேரத்துல வந்து அஞ்சலி செலுத்திட்டேன்’ என்கிறார் சாய்.

அது அவர் பெருந்தன்மை!

‘ஆடுகளம்’ சீரியல் நல்ல பெயரை வாங்கித் தந்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் நடிகர் ராஜேந்திரன். ‘டிவி நடிகர் சங்கப் பொறுப்புல இருந்ததால் சில சேனல்களின் பகையைச் சம்பாதிச்சு, அதனால் ஏகப்பட்ட சீரியல் வாய்ப்புகளைத் தவற விட்டிருந்தேன். அந்த நிலை ஒருவழியா கடந்து ‘ஆடுகளம்’ சீரியல் இவ்வளவு வயசுக்குப் பிறகு ஒரு நல்ல கம் பேக் தந்திருக்கு’ என சீரியல் தொடங்கியபோது நம்மிடம் பேசியிருந்தார். தற்போது ‘சக்தித் திருமகன்’ படமும் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாம்.

ராஜேந்திரன்

‘படத்துல அரசியல்வாதி கேரக்டர் தந்தாங்க. அதுவும் விஜய் ஆன்டனியை அடிக்கிற மாதிரி காட்சி. பெருந்தன்மையோட அந்தக் காட்சிக்குச் சம்மதிச்சார் விஜய் ஆன்டனி சார். படத்தின் ரிசல்ட் குறித்த நல்ல தகவல் வந்திட்டிருக்கிறதா சொல்றாங்க. ‘மொட்டை’ ராஜேந்திரனுக்கு எப்படியோ அதுபோல இந்த ராஜேந்திரனுக்கும் செகன்ட் இன்னிங்ஸ்ல வாய்ப்புகள் அமையுதுனு நினைக்கிறேன்’ எனச் சிரிக்கிறார் மனிதர்.

ஹீரோயின் ஆக விடுங்களேன்!

‘சிந்து பைரவி’ தொடரில் நடித்து வரும் சஹானாவுக்கு நெகடிவ் கேரக்டர் வாய்ப்புகள் நிறையவே வருகின்றனவாம். டிவிக்கு வந்தது முதல் இவ்வளவு காலம் வில்லியாகவே நடித்து விட்டதில் போரடித்து விட்டதுபோல.

சஹானா

‘ஹீரோயினா ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்’ எனச் சொல்லியே அந்த வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம். ஹீரோயினுக்கான முயற்சி அவருக்கு கை கொடுக்கலாமென்கிற பேச்சும் டிவி ஏரியாவில் கேட்கிறது. அடுத்த தொடர் கமிட் ஆனால் ஹீரோயினாக ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்கிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *