• September 23, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் செங்கோட்டையன் பேசியும் வந்தார். இதனால், செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாகவே மேட்டுப்பாளையத்துக்குச் சென்றார். அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கவில்லை. கடந்த 5-ஆம் தேதி, கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன்.

10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். தொடர்ந்து, செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி.சத்யபாமா உள்ளிட்ட 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த கெடு செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக பேசிய செங்கோட்டையன், “என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

வரவேற்பு

பிரமாண்ட வரவேற்பு

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதற்காக செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையம் வழியாக நீலகிரிக்குச் சென்றார். கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையனுக்கு மாற்றாக ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.செல்வராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டையனுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஏற்பாட்டில் பவானி, கோபிசெட்டிபாளையம்,பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வந்திருந்தார்.

செங்கோட்டையன் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற நினைக்கும் அந்தியூர் எம்எல்ஏவும், கே.சி.கருப்பணின் ஆதரவாளருமான எம்.ஆர்.ராஜா தன் பங்குக்கு அதிக அளவில் தொண்டர்களை களமிறக்கி இருந்தார். அதேபோல், அந்தியூர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ். ரமணிதரன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக இருந்த பவானிசாகர் எம்எல்ஏ பன்னாரி தலைமையில் சத்தியமங்கலம் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

செங்கோட்டையன்

மற்ற தொகுதிகள் வழியாகச் செல்லும்போது, காரில் இருந்தவாரே வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, கோபிசெட்டிபாளையத்தில் காரில் இருந்து இறங்கி சுமார் 15 நிமிடத்துக்கும் மேல், தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லால், நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்த எடப்பாடி பழனிசாமி தனக்கு அருகில் அவர்களை நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த உள்ளூர் நிர்வாகிகள் பலரையும் இந்த வரவேற்புக் கூட்டத்தில் காண முடிந்தது. ஏற்கெனவே, செங்கோட்டையனிடம் இருந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அவருக்குப் பின்னால் சென்றதால் கடும் அதிருப்தியில் செங்கோட்டையன் இருக்கும் நிலையில், தனது தொகுதிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்ததால், செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *