
புதுக்கோட்டை எஸ்.எஸ் நகரைச் சேர்ந்தவர் நித்தியராஜ் (வயது: 40). இவர் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள டி.வி.எஸ் கார்னர் அருகில் உள்ள எஃப்.எல்.டு மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, காரைக்குடி குளோபல் மருத்துவமனையில் பார்மசிஷ்டாக பணியாற்றும், புதுக்கோட்டை (வல்லம்பர்) பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அங்கு வந்திருக்கிறார். அவர் நித்தியராஜிடம் தனக்கு தரவேண்டிய 22,000 ரூபாயைத் திரும்ப கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், இடது மார்பருகே குத்தியதில் நித்தியராஜ் காயம் ஏற்பட்டு, துள்ளத் துடிக்க கீழே சரிந்தார்.
இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்று பார்த்தபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நித்தியராஜின் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகக் கொண்டுசெல்லப்பட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தன் நண்பரை கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.