
இந்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய ஜிஎஸ்டி விதிகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் எனத் தெரிவித்திருந்தார்.
புதிய வரிவிதிப்பின் கீழ் பால் சார்ந்த பொருட்கள், பற்பசை, பிரஷ், பிஸ்கெட், சாக்லேட், பல்வேறு வகையான நொறுக்குத்தீனிப் பொருட்கள் உட்பட மொத்தம் 375 பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு வகையாக வரிகள் இருந்து வந்தன. இன்று முதல், ஜி.எஸ்.டியில் 5 சதவிகிதம், 18 சதவிகிதம் என இரண்டு வகையான வரிகள் மட்டுமே இருக்கப்போகின்றன.
5 சதவிகித வரி அத்தியாவசிய தேவை பொருள்களுக்கும், 18 சதவிகித வரி பிற பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் தாண்டி, ஆரோக்கிய கேடான பொருள்களுக்கு (Sin goods) 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது இன்று முதல் அமலுக்கு வராது. இதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை, இப்போதிருக்கும் வரியே இவற்றுக்கு மட்டும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆவின்
ஆவின் பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிப்பு
ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஆவின் பால் விலையிலும் தாக்கத்தைச் செலுத்தி உள்ளது.
ஆவின் நிறுவனம் தனது நெய், பனீர், யுஹெச்டி பால் ஆகியவற்றின் விலையைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து ஆவின் பொருட்களும் எம்ஆர்பி விலையில் தொடரும். ஆனால், ஜிஎஸ்டி மாற்றங்களின்படி புதிய விலைப்பட்டியல் செப்டம்பர் 22 முதல் அமலில் வரும்” என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், விழாக்கால சிறப்புச் சலுகையாக பல்வேறு அளவுகளில் கிடைக்கும் நெய், பனீர், யுஹெச்டி பாலின் விலையில் தள்ளுபடி வழங்கப்படும். இந்தச் சலுகை செப்டம்பர் 22 முதல் நவம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்தப்பட்டவுடன் விலை குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று உறுதியளித்தார்.
ஆனால், புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உண்மையில் குறைந்துள்ளதா?
விகடன் வாசகர்களாகிய நீங்களே பட்டியலிடுங்கள்! கமெண்ட் செக்ஷனில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விலையைப் பட்டியலிடுங்கள்.