
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி குன்னூரில் உரையாற்றினார்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற நாளிலிருந்து அனைத்துத் துறைகளும் ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம் டாஸ்மாக் கடைகள். ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அந்த துறையின் அமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணம் யாருக்கு செல்கிறது என்று தெரியவில்லை. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற போதைப்பொருள் புழக்கமும் அதிகரித்திருக்கிறது.
அ.தி.மு.க வின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருப்பதாக கனிமொழி பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் கனிமொழி கனவு கண்டிருக்கிறார் போல. சந்தேகம் இருந்தால் சென்னையில் வந்து பார்த்துக்கொள்ளட்டும் அவர். அ.தி.மு.க வை பிளக்க எவ்வளவோ சதி செய்து பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

அ.தி.மு.க அலுவலகத்தை நொறுக்கப் பார்த்தார்கள் அதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சியை யாராலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது. இக்கட்டான சூழ்நிலையில் தி.மு.க- வை பிளவில் இருந்து காப்பாற்றியதே ஜெயலலிதா தான் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.