
சிங்கப்பூரில் நடந்த கான்சர்ட் சென்ற பிரபல பாடகர் ஜூபீன் கார்க் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி நீரில் மூழ்கி இறந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரிலேயே ஜூபீன் கார்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அவருடைய மரணத்திற்கான காரணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என இங்கிருந்த அவருடைய ரசிகர்கள் மீண்டும் இங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள கோரிக்கை வைத்தார்கள்.
அசாம் மாநில அரசும் மீண்டும் குவஹாத்தி மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்வதற்குக் கூறியது.
சிங்கப்பூரிலிருந்து அசாம் கொண்டுவரப்பட்ட அவருடைய உடலைக் காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயணித்து, மக்கள் பெருமளவில் திரண்டனர்.
இந்தியாவிலேயே ஓர் இசைக் கலைஞருக்கு இவ்வளவு ரசிகர்கள் திரண்டு வந்திருப்பது இதுவே முதல் முறை எனவும் சொல்கிறார்கள்.

“இந்தளவிற்கு மக்களின் அன்பைப் பெற, அவர் என்ன செய்துவிட்டார்? அவர் அரசியல் பிரமுகரா? சினிமா பிரபலமா?” என்பதுதான் பலரின் கேள்விகளாக இருக்கிறது.
அசாம் மக்களுள் ஒருவராக இத்தனை ஆண்டுகள் அவர் செய்த விஷயங்களே மக்களுக்கு அவரைப் பிடித்தமானவராக்கியிருக்கிறது. 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்கள் பாடிய இவர் நடிகர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைக் கொண்டவர்.
இதையும் தாண்டி அசாம் அடையாளமாகத் திகழும் இவர் மக்கள் நலனுக்காகவும் பல செயல்களைச் செய்திருக்கிறார். அதோடு, மக்களுக்கு ஆதரவாகப் பல நேரங்களில் குரல் கொடுத்தும் இருக்கிறார்.
எந்தவொரு அரசியல் கட்சியையும் ஜூபீன் சார்ந்தவர் கிடையாது. பிரிவினைவாத வன்முறைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த ஜூபீன், அதற்காகப் பல மிரட்டல்களையும் சந்தித்திருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டியவர் ஜூபீன்.

அதுமட்டுமல்ல, பல ஆண்டுகளாகச் சிறு நகரங்கள், சிறு கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்து வந்தார். அவர்களுக்கான கல்வி, மருத்துவச் செலவுகள் என அனைத்திற்கும் இவர் உதவி செய்திருக்கிறார்.
முக்கியமாக, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்குத் தன்னுடைய அடுக்குமாடி வீட்டையும் இவர் வழங்கியிருந்தது பெரிதாகப் பேசப்பட்டது.
இதுபோல, மக்களுக்காக பல விஷயங்களாக செய்து அசாம் மாநிலத்தின் தவிர்க்க முடியாத அடையாளமாக இவர் திகழ்ந்து வந்தார்.
ஜூபீன் கார்கின் பிரபல பாடலான `மயாபினி’ பாடல் ஒலிக்க, அவருடைய உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.