
“தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்” என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,
அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ. 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வரதலட்சுமி,
“அங்கன்வாடி ஊழியராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் எங்களின் கோரிக்கைகளையும், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
நாங்கள் வாடகைக் கட்டடங்களிலும் பழுதடைந்த கட்டடங்களிலும் அங்கன்வாடிகளை நடத்தி குழந்தைகளைப் பராமரித்து வருகிறோம்.

அரசின் பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் எங்களது கோரிக்கைகளை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. எங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் இருந்தால் நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.