• September 23, 2025
  • NewsEditor
  • 0

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், அம்மா பூங்கா அருகில் மாயனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகவல்லி ரகுபதி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சுமார் 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, தென்ன மரங்கள் பராமரித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்நிலையில், கடந்த 2017-ல் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. செல்லாண்டியம்மன் கோயில் மற்றும் அம்மா பூங்காவிற்குத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை புரிந்து வந்தனர்.

அதன் பின் கற்பகவல்லி ரகுபதி, அந்த இடத்தில் இரண்டு திருமண மண்டபங்கள் கட்டி பொதுமக்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தார். இதற்கிடையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த இடத்தினை அகற்றக் கோரி, 2016-ல் நீர்வளத் துறையின் சார்பில் நோட்டீஸ் கொடுத்தனர்.

நோட்டீஸைப் பெற்றுக் கொண்ட கற்பகவல்லி ரகுபதி, மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். தொடர்ந்து வழக்கு நிலுவையிலிருந்து வந்தது. இறுதியாக, மதுரை ஹைகோர்ட் 45 நாட்களுக்குள் நீர்வளத் துறைக்குச் சொந்தமான இடத்தினை அகற்றிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

அதேபோல், ஆக்கிரமிப்பாளர் தங்களது இரண்டு திருமண மண்டபங்களை மற்றும் பொருட்களை அகற்றிக் கொள்ள முன்வராதபட்சத்தில், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்நிலையில், நீதிமன்றம் விதித்த கெடு முடிந்து 46-வது நாளான இன்று நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி கிருஷ்ணன் தலைமையில், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் ஒரு பொக்லைன், இரண்டு ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் சுமார் 50 சென்டில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு திருமண மண்டபங்கள், சமையல் கூடம், கடைகள் அகற்றப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணியின் போது சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் ஏற்பட்டன. நீர்வளத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து திருமண மண்டபங்கள் கட்டி வாடகைக்கு விட்டு வந்த மாயனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகவல்லி ரகுபதி தி.மு.க-வில் இருந்தவர்.

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்

தற்பொழுது கட்சி மாறி பா.ஜ.க கட்சியிலிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆக்கிரமித்துக் கட்டிய கட்டடத்தை அதிகாரிகள் அகற்றிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *