
‘காசா’ இப்போது சர்வதேச அளவில் உச்சரிக்கப்படும் சொல். அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கிய போர் ஏறத்தாழ மூன்றாண்டை நெருங்கிவிட்டது.
இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காச்சா நகரம் ஏறத்தாழ முற்றும் முழுவதுமாக அழிந்துவிட்டது.
செயற்கைப் பஞ்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. Save The Children அமைப்பின் தகவலின்படி 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் குண்டு சத்தங்களுக்கு மத்தியில், உதவிக்கான வாகனங்கள் வரும் திசையைப் பார்த்து காத்திருக்கிறார்கள்.
போதுமான உணவும், மருத்துவமுமின்றி ஆயிரக்கணக்கானவர்கள் சொட்டும் ரத்தத்துடன், காயத்தின் மீதான ஈக்களை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பகுதியைக் குறிவைத்து குண்டுகள் வந்து விழுகிறது. ஐ.நா அறிக்கையின்படியே, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்றில்லாமல் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டது.
கதறும் குழந்தைகள், நோபல் கேட்கும் ட்ரம்ப்
இத்தனைக் கொடுமைகளையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் இஸ்ரேல், கடந்த 11-ம் தேதியிலிருந்து தரைவழித் தாக்குதலையும் தொடங்கியிருக்கிறது.
இஸ்ரேலுக்கு துணைபோகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘எனக்கு நோபல் பரிசு கொடுத்தாக வேண்டும்’ என அடம்பிடிக்கிறார்.
நல்லவேலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நோபல் பரிசு வேண்டும் என கேட்காமல் விட்டாரே?

போர் ஏன் முடியவில்லை:
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், ‘ஹமாஸை ஒழிக்காமல் விடமாட்டோம்’ என உறுதியாக இருக்கிறது இஸ்ரேல். அதனால், ஐ.நா-வின் தீர்மானத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.
அமெரிக்காவின் ஆதரவுடன் தொடர்ந்து தாக்குதலையும் நடத்திவருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்ற கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இதன் காரணமாக மத்தியஸ்த வாய்ப்பும் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது.
இரு நாட்டிலும் அரசியல் ஆதாயத்துக்காக போரை ஆதரிக்கும் குழுக்கள் செயல்படுகின்றன. அதன் தாக்கத்திலிருந்து அரசியல் கட்சிகளால் பின்வாங்க முடியவில்லை.
இன்னொருபக்கம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது இருக்கும் ஊழல் வழக்குகள் ஒவ்வொன்றாக விசாரணைக்கு வந்துகொண்டிருக்கிறது.
அதிலிருந்தும் தப்பிக்க நெதன்யாகுவுக்கு கிடைத்திருக்கும் ஒரே துருப்புச் சீட்டு இந்த கண்மூடித்தனமான தாக்குதல் மட்டுமே.
எனவே, இந்தப் போரை ஆதரிக்காத உலக நாடுகள் மீது வன்மத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறார்.
உலக நாடுகள் என்ன சொல்கின்றன?
G20 உறுப்பு நாடுகளில் பதின்மூன்று நாடுகள், BRICS+ நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் (EU), OIC (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு), ஆப்பிரிக்க ஒன்றியம் (African Union), அணிசேராத இயக்கம் (Non-Aligned Movement – NAM), ஐ.நா-வின் 193 நாடுகளில் 151 நாடுகள் (78%+) என பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகள் இவ்வளவு இருந்தும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
இஸ்ரேலின் நடவடிக்கை ‘இனப் படுகொலை’ எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, ஐநா-வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், எதையும் இறுதிக்கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் அமெரிக்காவின் வீட்டோ பவர் தடுக்கிறது.
இந்த நிலையில்தான் செப்டம்பர் 15 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் நடந்த ஒரு நிகழ்வில், “பாலஸ்தீன நாடு இருக்காது” என நெதன்யாகு தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்திருக்கிறார்.
இதன் பொருள் மிகவும் ஆழமானது என்பதை காசா மீது தொடரும் தாக்குதல் நமக்கு உணர்த்துகின்றன.
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள்:
காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலால் காட்டமான பல்வேறு உலக நாடுகள், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.
குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளான பொலிவியா, கொலம்பியா ஆகியவை இஸ்ரேலுடனான தங்கள் தூதரக உறவுகளை முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டன.
துருக்கி, ஜோர்டான், சிலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலிலிருந்து தங்கள் தூதர்களைத் திரும்ப அழைத்துள்ளன.
ஸ்பெயின், கொலம்பியா, இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்திவைத்துள்ளன.
ஸ்பெயின் பிரதமர், இஸ்ரேலுடனான ராக்கெட் லாஞ்சர் €700 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருக்கிறார். கொலம்பியா இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்திவைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிப்பது அல்லது கூடுதல் வரி விதிப்பது குறித்து விவாதித்து வருகிறது.
தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) இஸ்ரேலுக்கு எதிராக “இனப்படுகொலை” குற்றச்சாட்டு வழக்குத் தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் பிரேசில், ஸ்பெயின், அயர்லாந்து, மெக்சிகோ, மற்றும் துருக்கி போன்ற நாடுகள் தென் ஆப்பிரிக்காவிற்கு ஆதரவாக இணைந்துள்ளன.
இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐநா சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் ஆதரவு அளிக்கும் என வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த நிலையில்தான் முக்கிய நகர்வாக கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்திருக்கிறது.
அமெரிக்காவைத் தவிர, ஐ.நா-வில் வீட்டோ பவர் இருக்கும் ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளும் காஸா போர் நிறுத்தத்துக்கு ஆதரவாகவே உள்ளன.
ஏன் இந்த நாடுகளின் ஆதரவு முக்கியம்?
அதனால், அமெரிக்கா பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமல் இருக்கிறது. அமெரிக்காவின் உற்ற நட்பு நாடுகளான கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளும் அதே நிலைப்பாட்டைப் பின்பற்றின.
மேலும், இந்த நாடுகளுக்கு இஸ்ரேலுடன் வலுவான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் இருந்தது. அதனால் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுடன் உள்ள உறவைச் சிக்கலாக்கும் எனவும் அஞ்சின.
இந்த நிலையில்தான், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றன.
இவர்களுடன் போர்ச்சுக்கல், பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க்-லும் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்திருக்கிறது.
இந்த அறிவிப்புக்குச் சற்று முன்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஷோஷ் பெட்ரோசியன், “சில நாடுகளின் முடிவுகள் அபத்தமானது. பயங்கரவாதத்திற்கு அவர்கள் அளிக்கும் வெகுமதிதான் அவர்களின் ஆதரவு” எனத் தெரிவித்திருந்தார்.
உலக நாடுகளின் இந்த முடிவின் விளைவு?
“கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் ‘பாலஸ்தீன ஆதரவு’ப் போக்கு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்றாலும், லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அவமானப்படுத்தும், ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும், தொடர்ந்து மக்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் இஸ்ரேலுக்கு எதிரான சிறிய குறியீட்டு நடவடிக்கை என்றே கூறமுடியும் என பாலஸ்தீன ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
அதே நேரம், அமெரிக்க நட்பு நாடுகளின் பாலஸ்தீன அங்கீகாரமும், அமெரிக்க ஆதரவு நாடான இஸ்ரேலை ஒதுக்கி வைப்பதும் வரவேற்கத்தக்கது. உலக அரசியலில் மிக முக்கியமானது என்ற கருத்தும் நிலவுகிறது.
உலக நாடுகளின் இந்த செயல்ககள், இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை வழங்கினாலும், இந்த நாடுகளின் பாலஸ்தீன அங்கீகாரம் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது” என்கின்றனர் பாலஸ்தீன அரசியல் ஆய்வாளர்கள்.
சர்வதேச சமூகத்திடமிருந்தும், உள்ளூர் மக்களிடமிருந்தும் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ள, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவே கருதுகிறார்கள் அவர்கள்.
இந்த நடவடிக்கையின் மூலம், அந்தந்த நாட்டுத் தலைவர்கள் தங்களை மக்கள் அழுத்தத்தில் இருந்தும், ஒரு விதமான குற்ற உணர்வில் இருந்து தற்காத்துக்கொள்கிறார்கள்.
“இஸ்ரேல் மீதான ஆயுதத் தடை, பொருளாதாரத் தடை போன்ற உறுதியான நடவடிக்கைகள் செயல்படுத்தாதவரை, உலக நாடுகளின் நடவடிக்கை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் இது ஒரு நல்ல முன்னேற்றம்,” என்கிறார் இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆய்வாளர் கிறிஸ் ஓசீக் தெரிவித்திருக்கிறார்.
சுயமரியாதைக்கான குரல்:
ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலியப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த கால நிகழ்வுகளின் காரணமாக இஸ்ரேலுக்கு அதீத ஆதரவை வழங்கும் ஜெர்மனி போன்ற நாடுகளின் எதிர்ப்பு காரணமாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பிற முயற்சிகளும் முடங்கியுள்ளன.
தனிப்பட்ட நாடுகளின் அறிக்கைகளும், அவற்றின் நடவடிக்கைக்கு ஏற்றார் போல் இல்லை. உதாரணமாக, காசாவில் பஞ்சம் நிலவினாலும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
சிரியா விவகாரத்துக்கு பின், ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இது அங்கு தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.
இதன் காரணமாக குடியேற்றக் கொள்கைகள் ஒரு சர்ச்சைக்குரிய உள்நாட்டுப் பிரச்சினையாக மாறியது. ஐரோப்பிய நாடுகள் காசாவிலிருந்து ஒரு சிறிய எண்ணிக்கையிலான அகதிகளை மட்டுமே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.
ஒப்பிட்டளவில் பெல்ஜியம் அதிக எண்ணிக்கையிலான அகதிகளின் விண்ணப்பங்களைப் பெற்றாலும், குறைந்த அளவிலான அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.

தெற்கு காஸாவின் ரஃபா நகரத்தைச் சேர்ந்த 34 வயதான பஹ்ஜத் மடி, 2022 முதல் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். தன் தந்தையையும் பெல்ஜியத்தில் குடியமர்த்தத் தொடர்ந்து போராடி வருகிறார்.
”விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால், ஜெருசலமில் இருக்கும் தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என பெல்ஜியம் நிபந்தனை விதிக்கிறது.
இந்த நிபந்தனை நிறைவேற்றமுடியாதது. அதற்கான சூழல் பாலஸ்தீனத்தில் இல்லை” என பஹ்ஜத் மடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதுபோல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் காசாவின் எல்லையில் காத்திருக்கின்றன.
இது குறித்துப் பேசிய ஜெர்மன் மார்ஷல் ஃபண்ட் சவுத்தின் துணை நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா கௌஷ், “இவ்வளவு குறுகிய காலத்தில், சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய மாற்றத்தை நான் பார்த்ததில்லை.” என்கிறார்.
அவர், “பாலஸ்தீனத்தின் நிலை நிச்சயம் மாறும். ஆனால் வார்த்தைகளுக்கு அப்பால் உலக நாடுகள் என்ன உறுதியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.இது பாலஸ்தீனியர்களுக்கானது மட்டுமல்ல. மேற்கு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச சட்டத்தையும், பலதரப்பு வாதத்தையும், தங்கள் நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த முடியுமா என்பதை பற்றியதும் கூட.” என தெரிவித்திருக்கிறார்.
எனவே, பாலஸ்தீனம் விவகாரத்தில் உலக நாடுகளின் குரல் பாலஸ்தீனத்துக்கான குரல் மட்டுமல்ல, தங்களின் சுயமரியாதைக்கான குரலும்கூட.
இந்த கட்டுரையை பாலஸ்தீன கவிஞர் மகமூத் தர்வேஷ் கவிதையுடன் முடிப்பதுதான் சரியாக இருக்கும் என கருதுகிறேன்.
போர் நிச்சயம் முடியும்
தலைவர்கள் கைகுலுக்குவார்கள்
அந்த வயதான பெண்மணி தியாகியான தனது மகனுக்காக
காத்துக் கொண்டே இருப்பாள்.
தன் அன்பிற்குரிய கணவனுக்காகஅந்த இளம்பெண் காத்திருப்பாள்
நாயகர்களான தமது அப்பாவிற்காக
அந்தக் குழந்தைகளும் காத்திருப்பார்கள்
நான் அறியவில்லை
யார் நமது தாய்மண்ணை விற்றார்கள்?
ஆனால் நான் பார்த்து விட்டேன்
விலை கொடுக்கப் போவது யார் என்று.
காசா போர் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. காசா போர் எப்போது தொடங்கியது?
அக்டோபர் 7, 2022 அன்று தொடங்கிய போர் ஏறத்தாழ இரண்டாண்டை நெருங்கிவிட்டது.
2. காசாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை?
இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
3. போர் ஏன் இன்னும் முடியவில்லை?
-
மத்தியஸ்தம் செய்ய முயன்ற கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஆகையால், மத்தியஸ்த வாய்ப்பு தடைபட்டது.
-
இரு நாட்டிலும் அரசியல் ஆதாயத்துக்காக போரை ஆதரிக்கும் குழுக்கள் செயல்படுகின்றன.
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது இருக்கும் ஊழல் வழக்குகள் ஒவ்வொன்றாக விசாரணைக்கு வந்துகொண்டிருக்கிறது.
-
அதிலிருந்தும் தப்பிக்க நெதன்யாகுவுக்கு கிடைத்திருக்கும் ஒரே துருப்புச் சீட்டு ‘பிணைக் கைதிகளை மீட்போம்’ என்ற வாக்குறுதி.
-
இந்தப் போரை முடிக்க வேண்டுமானால், உலக நாடுகளின் அழுத்தத்தால் மட்டுமே முடியும்.
4. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கிறதா ஐநா?
ஐ.நா-வின் 193 நாடுகளில் 151 நாடுகள் (78%+) பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கின்றன.
5. ஐநா-வின் தீர்மானம் ஏன் நிறைவேற்றப்படவில்லை?
ஐநா-வில் போர் நிறுத்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் அமெரிக்காவின் வீட்டோ பவர் அதை தடுக்கிறது.
6. ஐநா-வில் வீட்டோ பவர் கொண்ட நாடுகள் எவை?
அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ்
7. இஸ்ரேலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
-
தூதரக உறவு துண்டிப்பு
-
ஆயுதங்கள் விற்பனை நிறுத்தம்
-
வர்த்தக ஒப்பந்தம் ரத்து
-
இஸ்ரேல் பொருளுக்கு தடை அல்லது கூடுதல் வரி
-
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
-
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு