Doctor Vikatan: அமுக்கரா சூரணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுமா, இதை யார் சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும்?
மன அழுத்தத்துக்கான ஆங்கில சைக்யாட்ரிக் மருந்துகளுக்கு பதில் இதை எடுப்பது பாதுகாப்பானது என்கிறார்களே, உண்மையா?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அமுக்கரா சூரணம் என்பது மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய மிகச் சிறந்த மருந்து. அடிப்படையில், மன அமைதியைக் கொடுக்கக்கூடிய மனநல மருந்துகளில் முக்கியமானதும்கூட.
ஒருவர் தீவிரமான மனநல பிரச்னைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றால், திடீரென அதை நிறுத்திவிட்டு, சித்த மருந்துகளுக்கு மாற வேண்டாம்.
ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளோடு, சித்த மருந்துகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த மருத்துவமாக எடுத்துக்கொள்ளும்போது, ஆங்கில மருந்துகளின் அளவு குறைய வாய்ப்பு உண்டு.

அதுவே ஆரம்பகட்ட மனநல பிரச்னைகள் என்றால், சித்த மருந்துகளை, குறிப்பாக அமுக்கரா சூரணம் எடுத்துக்கொள்ளலாம்.
தீவிர மனநல பாதிப்பில் வெறும் அமுக்கரா சூரணம் மட்டுமே உதவும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இருக்க மாட்டார்.
சித்த மருத்துவத்திலும் சரி, ஆயுர்வேதத்திலும் சரி, ‘காம்பினேஷன் டிரக்ஸ்’ என்ற கான்செப்ட்டில் புதிய புதிய மருந்துகளைக் கலந்து நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுவதுண்டு.
அவற்றில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் சரி, மன அமைதியைக் கொடுப்பதற்கும் சரி, அமுக்கராவைக் கொடுக்கிறார்கள்.
இதிலுள்ள வித்தனலாய்டு (Withanolide) எனப்படும் ஆல்கலாய்டுதான், மன அழுத்தம் குறைத்து மன அமைதியைத் தருகிறது.
பெரியவர்கள் தாராளமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்குத் தாம்பத்திய உறவின்போது வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் அமுக்கரா மருந்துக்கு உண்டு.
உடல் மெலிந்தோர், பலவீனமானோர், சோர்வுற்ற குழந்தைகள், (10 வயதுக்கு மேல்) இதை ஊட்ட மருந்தாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
பாலில் அரை டீஸ்பூன் அமுக்கரா சூரணம் கலந்து குடிக்கலாம். அமுக்கரா சூரணம் எடுப்பதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், எந்த மருந்தையும் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பதுதான் பாதுகாப்பானது, சரியானதும்கூட.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.