
சென்னை: தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்தவர்களை, 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், நர்ஸ்கள் பொதுநல சங்கம், தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.