
அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாள சினிமாவில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் பேசில் ஜோசப்.
இவர் கடைசியாக நடித்திருந்த ‘பொன்மேன்’, ‘மரணமாஸ்’ என இரண்டு திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தன.
சிவகார்த்திகேயனுடன் தமிழில் ‘பராசக்தி’ படத்திலும் தற்போது பேசில் ஜோசப் நடித்து வருகிறார்.
இயக்கம், நடிப்பைத் தாண்டி தயாரிப்பிலும் கால் பதித்திருக்கிறார். இதனிடையே ‘சக்திமான்’ படத்தில் ரன்வீர் சிங் – பேசில் ஜோசப் கூட்டணி இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் இதுதொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் Chalchitra Talks என்ற பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் அனுராக் காஷ்யப் பேசில் ஜோசப் எடுக்க இருந்த ‘சக்திமான்’ படம் குறித்து பேசியிருக்கிறார்.
“நிகழ்ச்சி ஒன்றில் பேசிலை சந்தித்தேன். இரண்டு, மூன்று வருடங்களிலேயே எப்படி விதவிதமான கதாபாத்திரங்கள் நடித்து பொறுப்புகளைக் கையாள்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர், “என்னுடைய இரண்டு ஆண்டுகளை ‘சக்திமான்’ படத்தில் வீணடித்துவிட்டேன். கடவுளே… எப்படி இந்தத் துறையில் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு நான், “என்னால் முடியவில்லை. அதனால் தான், நான் சிறிது காலம் விலகி இருந்தேன்” என்று கூறினேன். பேசிலின் வார்த்தைகள் அவர் என்ன நினைக்கிறார் என்பதை பிரதிபலித்தது.
அவர் ஒட்டுமொத்த இரண்டு ஆண்டுகளை சக்திமானுக்காக இழந்திருக்கிறார்” என்று அனுராக் காஷ்யப் கூறியிருக்கிறார்.