• September 22, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நான் இப்போது ஒரு மூத்த குடிமக்கள் வட்டத்தில் இருக்கிறேன். அதற்கென்று தள்ளாத வயது என்று அர்த்தமில்லை.  முப்பது வருடங்களாக நான் கடைபிடிக்கும் காலை வாக்கிங் இன்றும் தொடர்கிறது.

சிறியதாக ஒரு அறிகுறி. சர்க்கரை நோய் வரலாம் என்று டாக்டர் சொன்ன பிறகு தொடங்கிய வழக்கம். என்றாவது ஒரு நாள் போகவில்லை  என்றாலும் மனம் ஏற்றுக்கொள்ளாது.

பெரியதாய் ஒன்றும் ஏற்ற தாழ்வுகள் வாழ்க்கையில் சந்திக்கவில்லை என்றாலும் அப்படி ஒன்றும்  சொகுசான வாழ்க்கையும் இல்லை இளமை பருவத்தில்.

என் அப்பா ஒரு குமாஸ்தா. அம்மாவிற்கு வீட்டில் குடும்ப பராமரிப்பு.

நான்கு மகன்களுக்கு பிறகு கடைக்குட்டியாக நான் பிறந்தேன். பெற்றோருக்கு ஆசை பெண். அண்ணண்மார்க்கு அருமை தங்கை.

வெளியே கூட்டி சென்று தன்னால் முடிந்ததை வாங்கி கொடுத்த அப்பா! வீட்டில் என்னை அலங்கரித்து அழகு பார்த்த என் அம்மா. நான் நீ என்று  போட்டி போட்டு என்னுடன் விளையாடிய அண்ணன்மார். எல்லையற்ற அன்பு.

பணவசதி கைக்கும் வாய்க்கும் எட்டும் நிலைமை. பசி என்று இல்லாமல்  ஆனால் வேறு அதிகப்படியான சவுகரியங்கள் இல்லை.

கதைகளில் கூறுவது போல் ஒரே ஒரு அறை. தாழ்வாரம் ஓரத்தில் சமையல் அறை. அந்த குடியிருப்பில் இதைப்போல் குறைந்தது எட்டு குடும்பம். எல்லோருக்கும் பொதுவான பாத்ரூம் டாய்லெட் . 

படுப்பதற்கு சாக்கு விரிப்பு. மழை பெய்தால் ஒழுகும் இடத்தில் பாத்திரங்களை வைத்து இருக்கும் மீதி இடத்தில் சுருண்டு படுத்தது நினைவில் வருகிறது. வெயில் காலத்தில் அப்பா அண்ணன்மார் மொட்டை மாடியில் படுக்க எனக்கும் என் அம்மாவிற்கும் இந்த ஒற்றை அறை  மாளிகை முழுவதும்!

உடுக்க இரண்டு அல்லது மூன்று செட். பல நாட்கள் என் அம்மா  ஆங்காங்கே கிழிந்த உடைகளை, ஊசி நூல் கொண்டு தைத்து கொடுத்தது இன்றும் நினைவில். ரேஷன் கடையில் அந்த பெரிய க்யூவில் கால் கடுக்க நின்று என் அண்ணனும் அம்மாவும் பொருட்கள் வாங்கியதை பிற் காலத்தில் என் அண்ணன் சொல்ல கேட்ட போது மனதை  பிழிந்தது.

ஒரு முறை பள்ளி நடந்து போகும்போது சாலை கடக்க பார்த்தேன். இன்றும் அந்த நிகழ்ச்சி மிகத் தெளிவாக நினைவில். ஒரு பெரிய கார் இடித்து நான் கீழே விழுந்தேன்.  அடியில் நான் விழ என் பை டிபன் பாக்ஸ் தெறித்து விழுந்தது. என் தலை வெளியே. கார் அடியில்  இடையில் படுத்து இருந்தது போல் தோற்றம். சிறியதாக முழங்காலில் ஒரு சிராய்ப்பு. . என் பெற்றோரின்  ஆசி போலும்!  எழுந்து வெளியே வந்தேன்.  மீதி தூரம் நடந்து சென்றேன்.  எவரிடமும் மூச்சு விட வில்லை இதை பற்றி. மறுநாள்   இதை பார்க்க நேர்ந்த ஒரு குடும்ப நண்பர்  அம்மா அப்பாவுக்கு விஷயத்தை சொல்ல ஒரே டென்ஷன் இருவருக்கும். அதே சமயம் ஒன்றும் நேரவில்லை என்றும் மகிழ்ச்சி! கடவுள் அல்லவோ இதை இப்பொழுது நான் சொல்லும் அளவிற்கு  வைத்திருக்கிறார்,

எங்கள் ராசி! இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வீடு மாற்றும் படலம். வீட்டு ஓனர் காலி செய்ய சொல்லியோ அல்லது கொஞ்சம் பெரிய வீட்டுக்கு வாடகை கொடுக்கும் ஒரு சிறிய வசதியோ! என்னுடைய 18 வயது வருவதற்குள் ஆறு ஏழு வீடுகள் மாறினோம். சாமான்கள் ஏற்றி சென்ற  மாட்டு வண்டி பின்னால்  நடந்து சென்ற நினைவுகள். ஆனால் ஒன்று. ஒவ்வொரு மாற்றமும் எங்களின் மேன்மைக்கு வழியாகவே அமைந்தது .

மூத்த அண்ணன் தலை எடுக்க குடும்ப பாரத்தை  அப்பாவுடன் சேர்ந்து சுமக்க  .இப்பொழுது  கடலை மிட்டாய் வாங்கவும்  சாக்லேட் சாப்பிடவும் அண்ணன் உபயம். சிறிது சிறிதாக இரண்டு மற்றும் மூன்று பைசாவை  சேர்த்து அவர் என்னிடம் கொடுத்த போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு  எல்லையில்லை.

இப்போது ஒரு சிறிய பின்னடைவு. என் அம்மா ஹார்ட் அட்டாக் வந்து,  செத்து பிழைத்த அதிசயம். சமயத்தில் வந்து கைவிடாத டாக்டருக்கு நன்றி சொல்வதா? கடவுளுக்கு நன்றி சொல்வதா?  மற்ற நான்கு குழந்தைகள் இன்னும்  வளர்ந்து முன்னுக்கு வரும் வயதில் இல்லை. என் அம்மாவிற்கு ஏதோ ஒரு வைராக்கியம். எல்லோரையும் தவிக்க விடக்கூடாது என்று நினைத்தாள் போலும். அவள் ஒரு போராளி. எதையும் எதிர்கொள்ளும் மன திடம் அவளுக்கு உண்டு. அம்மாவின் உடல் நன்கு தேறும் வரை   வீட்டோடு இருந்து எங்களை முழுவதும் கவனிக்க வந்த ஒரு நல்ல அன்பு பெண்மணி. நாங்கள் கொடுத்த அந்த சிறிய தொகை அவள் குடும்பம் வாழ வழி செய்தது என்று அறிந்த போது  ஒரு சிறிய திருப்தி.  எங்களுக்கும் அவளுக்கு  உதவி செய்யும் அளவிற்கு வாழ்க்கையில் நாங்கள் அடைந்த ஒரு சிறிய ஏற்றம்.

 சில வருடங்கள் செல்ல ஒருவர் பின் ஒருவராக படித்து இயன்ற தகுந்த வேலைக்கு செல்லத் தொடங்கினர். நான் கல்லூரியை எட்டிவிட்டேன்.அந்த ராணி  மேரி கல்லூரியில் முதல்வர் அறையின் முன் ,நாள் முழுதும் காத்திருந்து  மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் கார்ட் பெற்ற போது ஒரு சந்தோஷம் . திறமை என்றும் அங்கீகாரம் பெற்று தரும் என்ற நம்பிக்கை உறுதி பெற்றது.

 முதல் வருட கல்லூரி படிப்பை முடிக்கும் போது என் வீட்டில் முதன் முதலில் சொந்த வீடு தவணை முறையில் வாங்க ஒரு எண்ணம்.  கடைசியாக குடியிருந்த வீட்டு சொந்தக்காரர் எங்களை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம்  திட்டத்தின்  கீழ் விண்ணப்பித்தோம். HIG குடியிருப்பில் ஒரு  சிறிய பிளாட்  என் அப்பா சேர்த்து வைத்த ஒரு செல்வம் நண்பர்கள். 

நான் நீ என்று போட்டி போடாத  குறை!  முதலில் செலுத்த வேண்டிய மொத்த  தொகை அவர்களின் உதவியுடன்! சொந்த வீட்டின் யோகம் எங்களுக்கும் அமைந்தது. மாத தவணை முறையில் 15 வருடங்களில் வீடு நம் கையில்!  நான் கூறியது போல் சிறிது சிறிதாக வாழ்க்கையில் மேல் வரத் தொடங்கினோம்.

மீதி  அண்ணன்மார் சொந்தமாக உற்பத்தி தொழிற்சாலை தொடங்க நினைத்து   செய்த வேலையை ராஜினாமா செய்து  தொழிலில் இறங்கினர். அன்பாய் இருந்த வந்த அண்ணிமார். தொழிலிலும் ஏகப்பட்ட.ஏற்ற தாழ்வுகள்.  அனைத்தையும் எதிர் கொண்டனர் அண்ணன்மார். அம்மாவின் அணுக்கள் ஆயிற்றே!  கல்லூரி படிப்பு முடித்து வங்கியில் வேலை கிடைத்தது. சில வருடங்களில்  என் திருமணம் .அவர்கள் அனைவரும்  சேர்ந்து மிக சிறப்பாக  நடத்தினர்.

என் அப்பா சிறிய வயதில்  ரயில்வே பிளாட்பாரத்தில் காபி பொடி விற்றதில் இருந்து, இரண்டாம் உலகப்போர் சமயம் வான் வெளி தாக்குதல்  முன்னெச்சரிக்கை Air raid precautions- ARP)  குழுவில்  இருந்தவரை கூறும் போது மெய் சிலிர்த்தது. 

பஸ் கட்டணம் செலுத்த முடியாமல் பாரீஸ் கார்னர் வரை நடந்து  சென்றதை பலமுறை என் அப்பா கூறியது போக சொந்த கார் கொண்டு நாங்கள் அழைத்து சென்ற போது அவர் அடைந்த ஆனந்தம். பெருமிதம் இன்றும் என் கண் முன்!

அடிப்படை வசதி கூட இலலாமல் இருந்த காலம் போய், ஏசி அறையில் இருந்த போது என் அம்மா அனுபவித்த ,மகிழ்ந்த நேரங்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்தது ஒரு சிறிய பங்கே! 90 வயதுக்கு மேல் இருவரும் வாழ்ந்தனர். பேரக் குழந்தைகளின் திருமணத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

இன்று பெற்றோர் இருவரும் எங்களை விட்டு சென்றாலும் அவர்கள் எங்களை வாழ்க்கை பயணத்தில் நடத்தி சென்றது என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளது.

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவரும் பல இன்ப துன்பங்கள் சந்தித்திருக்கலாம். இதுவும் கடந்து போகும். நம் வாழ்க்கை பாதை திரும்பி பார்த்தால் முட்கள் இருந்திருக்கலாம். வெல்வெட் பாதையும் நமக்கு வந்தது. தன்னம்பிக்கை, அயராத உழைப்பு ,இரும்பு இதயம் எல்லாமே நம்மை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும்! நம்மில் பலரும் இதை உணர்ந்திருப்போம் என்பதில் சந்தேகமில்லை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *