• September 22, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

மிருகங்களில் நன்றியுள்ள மிருகம், நன்றிக்கு இலக்கணம்  என்று நாயைத் தான் குறிப்பிடுவார்கள். ஹச்சிகோ என்ற ஜப்பான் நாய் அதன் எஜமானர் ஹிடெசபுரோ உனோவிடம் காட்டிய விசுவாசம் அளப்பரியது எனலாம். அந்த நாய், உனோவின் மரணத்திற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வருவார் என்று ஒவ்வொரு நாளும் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தது. இதற்கு அங்கே சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் சினிமா Hachi: A Dog’s Tale வெளிவந்துள்ளது.

மேற்குறிப்பிட்டதற்கு முரண்பாடாக, யாரையாவது திட்டவேண்டுமென்றாலும் ‘நாயே ‘ என்று நம்மவர்கள் திட்டுவார்கள். 

அடிப்படையில் நாய் ஒரு வன விலங்கு . அதை வீட்டு விலங்காக மாற்றி அடிமைப்  படுத்தி விட்டோம். அதன் ஜீனில் (மரபணு) எங்கேயோ மிருகத்தனம் குடிக்கொண்டிருக்கும் . எப்போதாவது அந்த மிருகத்தனம் தலைத் தூக்கி, தான் விசுவாசம் செலுத்த வேண்டியர்களையே தாக்கி விடும். இந்த மாதிரியான செய்திகளை அவ்வப்போது வருவதை பார்த்திருக்கலாம். (லக்னோவில் 82 வயது உரிமையாளரை செல்லப்பிராணி பிட்புல் தாக்கிக் கொன்றது).

எங்கள் தெருவில் ஒரு தெரு நாய். எதிர் வீட்டார் தான் சோறூட்டி பேணிக்கிறார்கள். ஆனால், தெருவில் இருக்கும் வீட்டார்களின் செருப்புகளை மற்றும் வீட்டு குப்பைகளை  குதறி பாழ்படுத்தும் உரிமையை அதற்குக் கொடுத்துவிட்டார்கள். கௌரவமாக அதற்கு கம்யூனிட்டி -டாக் (community டாக்) பெயர். பெரும்பாலும் அவர்கள் வீட்டின் முன் பேமென்று விழுந்துக் கிடக்கும் . அவர்கள் கூப்பிட்டுச் சாப்பிட அழைத்தால் தான் சாப்பிடும். அவ்வளவு பிகு செய்யும். அதற்கு ஒரு கழுத்து பட்டையும் மாட்டி விட்டார்கள்.

நகராட்சியிடம் சொல்லி தடுப்பூசியும் வருடமொரு முறை போடுவார்கள். ஒரு நாள் அதைக் காணவில்லை. ஒரு நாள் காத்திருந்தும் அது வருவதாக புலப்பட வில்லை. வாட்சப் குரூப்பில் போட்டோ போட்டு கண்டுப் பிடித்துக் கொடுக்குமாறு வேண்டுதல் வேறு. அது எப்படி தொலைந்துபோயிருக்கும் ? . தெருக்களில் வரும் தள்ளு வண்டிகாரர்கள் யாராவது அவர்களுக்கு காவல் நாய் வேண்டுமென்று தள்ளிக் கொண்டு போயிருப்பார்களா? .

நான்கைந்து நாட்கள் கடந்தும் அது தென்படாமல் இருக்கவே, வேறு ஏதாவது தெரு நாய் வருமா என்று காத்திருக்கிறார்கள். அந்த வீட்டுக்காரியிடம் எல்லோரும் துக்கம் விசாரித்தோம் எனலாம். அவர்களுக்குச் சொந்தமாகக் குழந்தை  குட்டிகள் இல்லை. தனிமரம். அவர்களுக்கு இந்த நாயின் இருப்பு ஒருவித பாதுகாப்பு துணைக் கொடுத்தது எனலாம். இவர்களைப் போல் தெரு நாய் ஆதரவாளர்கள் செயல்பட்டால் பிரச்சினையின் தீவிரம் பெரிதும் குறையலாம்.

நாயிடம் எனக்கு என்னப் பகை? தெரு நாய்க்கு நான் ஆதரவா ? இல்லை எதிர்ப்பா ? என்றால் கண்டிப்பாக தெருநாய்க்கு நான் எதிர்ப்புத்  தான். நாய்க்கு எதிரி அல்ல.

என் சொந்த அண்ணன் இறந்துப் போனதற்கு தெரு நாய் முக்கிய காரணி என்று சொல்லலாம். அவர் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு ஆபிசுக்குக்  கிளம்பும்  போது தெரு நாய் திடீரென்று குறுக்கில் வர, அவர் சடன் பிரேக் போடவே வண்டி பாலன்ஸ் தவறி கீழே  விழுந்தார். அதனால் தொடையில் ஏற்பட்ட  எலும்பு முறிவை சரி செய்ய பிரபல ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஆப்பரேசன் செய்யும் போது இறந்துப் போனார். 

இப்போதெல்லாம் நாய்க்கடியின் தீவிரம் பற்றி அடிக்கடி செய்திகள் வலம் வருகின்றன. எப்படி இருந்தாலும் நாய்க்கடி பட்டால் , அது வெறி நாயோ இல்லையோ, தடுப்பூசி மிக மிக முக்கியம். நாட்டு வைத்தியம் பார்க்கிறேன் என்று அலைவது பெரும் ஆபத்தில் முடியும். ஒரு சிலர் தடுப்பூசி போட்டும் இறப்பதாக செய்தி தாளில் அடிபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் :  தடுப்பூசி தவணைகள் முழுதும் போட்டுக்கொள்வதில்லை.

தடுப்பூசிகள் காலாவதியாயிருக்கும். வளர்ப்பு நாய் தானே என்ற அலட்சியம். நாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாமை. மொராக்கோவிற்கு சுற்றுலா சென்ற 59 வயதான பிரிட்டிஷ் பெண் யுவோன் ஃபோர்டுக்கு சோகமான மரணம்  தழுவியது. காரணம், தெருவில் திரிந்த நாய் குட்டி ஒன்று அவளை லேசாகக் கீரியது. ஆனால் , அவள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வில்லை. பல மாதங்களுக்குப் பிறகு ரேபிஸ் காரணமாக அவரது நிலை மோசமடைந்து இறந்தாள் . ரேபிஸ் நோயின் அறிகுறிகள் நாய்க்கடித்து  ஒரு வருடத்திற்கு பின்னரும் தலைக்காட்ட கூடும்.

என்னைக் கேட்டால், தெருநாய்கள் பிரச்னைக்கு நம் நாட்டில் நிலவும் சுகாதாரத்தன்மையில்லாத சில பழக்க வழக்கங்கள் எனலாம். வீட்டில் மிச்சம் மீதியாகும் உணவுப் பொருட்களை வெற்று வெளியில் போட்டு விடுவது. தள்ளு வண்டி கடைகள் பெரும்பாலும் கழிவுகளை தெருக்களில் கொட்டி விடுவது.

தெருநாய்கள் பிரச்னை நம் நாட்டில் மட்டுமா என்றுப் பார்த்தால் அப்படி இல்லை. இது உலகளாவியது 2024 ஆம் ஆண்டில் மட்டும், நாட்டில் 37.17 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன, சராசரியாக ஒவ்வொரு நாளும் 10000 க்கும் மேற்பட்ட நாய் கடி.

அமெரிக்கா 34 கோடி மக்களுக்கு 9 கோடி நாய்கள் என்றால் இந்தியாவின் 140 கோடி ஜனத்தொகைக்கு சுமார் 10 கோடி நாய்கள் தான். ஆனால், நாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளில் நாம் தான் முதன்மை என்பது கவலையளிக்கக்கூடியது. நாய்க்கடி பாதிப்புகளில் நம் தமிழகம் இந்தியாவில் 3வது இடத்தில உள்ளதாக ஒரு தரவு தெரிவிக்கிறது.

இந்த விஷயத்தில் நாம் முன்னேறக்கூடாது என்று பிரார்த்தனைச் செய்கிறேன். நம் நாட்டில் கோவா மாநிலம் சிறப்பாக செயல்பட்டு ரேபிஸ் நோய் இல்லாததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி இந்தியாவில் ஆண்டுதோறும் 18,000–20,000 இறப்புகளை மதிப்பிடுகிறது; இது உலகளாவிய ரேபிஸ் இறப்புகளில் 36% க்கும் அதிகமாகும். பதிவாகாத நாய்க்கடி இறப்புகளைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கக் கூடும். நாய் தாக்குதல்களால் அமெரிக்காவில் வருடத்திற்கு $2 பில்லியன் வரை நிதி இழப்பு ஏற்படுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. நம் நாட்டில் இந்த மாதிரி தகவல் யாராவது கணக்கிட்டதாகத் தெரியவில்லை.

தெரு நாய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஆடுகள் மற்றும் வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன எனலாம். ஐஐடி மெட்றாஸில் மான்கள் தெருநாய்களால் குதறப்பட்டு இறப்பதுப் பற்றி வழக்கு விசாரணை நடந்ததாக அறிவேன்.

நாய்களின் பராமரிப்பு மேலாண்மையில் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம் அல்லது நாம் பிரச்சினையை தீவிரமாக கையாளவில்லை என்பது நிஜம். தெருநாய்களைப் பராமரிப்பதில் நெதர்லாந்து உலகளவில் சிறப்பாக செயல்படுவாக சொல்லப்படுகிறது. கருத்தடை, தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப்பிங் உள்ளிட்ட விரிவான அமைப்பை செயல்படுத்துவதன் மூலம் அந்த நாடு தெருநாய்களை அதன் தெருக்களில் இருந்து வெற்றிகரமாக ஒழித்துள்ளது. இதை கேள்விப்படும் நம்மூர் கில்லாடி அரசியல்வாதிகள் உடனே அங்கேயுள்ள நாய் கட்டுப்பாடு- பராமரிப்பு மாடலை தெரிந்து கொள்ள ஸ்டடி-டூர் (கல்வி சுற்றுலா) மேற்கொண்டு விட வாய்ப்புண்டு.

விலங்கு கட்டுப்பாட்டு விதிகள் 2001ன் படி, தெருநாய்களைக் கொல்லக்கூடாது, கருத்தடை மட்டுமே செய்ய வேண்டும். தெருநாய்களைக் கருத்தடை செய்ய நகராட்சிகளிடம் பணம் இல்லை. பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பகுதியில் தெருநாய் தாக்குதல்கள் பொதுவானவை என்றும், நாய் கடித்தலைக் குறைக்க நகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்ல என்றும் கருதுகிறார்கள். தெருநாய்கள் என்றால் யாரும் உரிமை கோரப்படாத நாய்கள் எனலாம். அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அவைகளைப் பேணிப்பாதுகாக்க அரசு நிர்வாகம் தன்னுடைய வருவாயிலிருந்து செலவழிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைக்குத் தனியாக வரி போடும் அரசு, இதற்கும் சிறிது வரியை நாய்களின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படும் காலம் வரை வசூலிக்கலாம்.

கடைசியில் நான் படித்த ஒரு வேதனையானச் செய்தி ஒன்று: ‘தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு நகரில் தனது பக்கத்து வீட்டு நாயை ‘நாய்’ என்று அழைத்த 65 வயது விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார்’. நாயை விட கீழ்த்தரமாக நடந்த நபரைப் பற்றி என்ன சொல்வது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *