
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு- தீர்மான உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார். கூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இருக்கைகள் போடப்பட்டுவிட்டதால் அனைத்து வாகனங்களையும், அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் போன்றவற்றையும் அருகில் உள்ள சாலை வழியாக திருப்பிவிடும்படி மேயர் மேடையிலேயே தெரிவித்தார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி பேச முற்பட்ட சமயத்தில் திடீரென கூட்டத்தின் பின்பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை பார்த்த மேயர் மகேஷ், “அனைத்து வாகனங்களையும் வேறு பாதையில் திருப்பிவிடும்படி கூறிவிட்டோம். அது போலீஸ் வாகனமாக இருக்கும்” என்றார். ஆனால், கனிமொழி எம்.பி சுதாரித்துக்கொண்டு, “அது ஆம்புலன்ஸ்தான், கொஞ்சம் வழிவிடுங்கள். நிச்சயமாக நம்மால் வழிவிடமுடியும். சேர்களை ஒதுக்கி வழிவிடுங்கள்” என்றார். உடனே அந்த வழியாக ஆம்புலன்ஸ் கடந்து சென்றது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேயர் ஆம்புன்ஸுக்கு வழிவிடவேண்டாம் எனக்கூறியதாக விமர்சனம் எழுந்தது. இதுபற்றி மேயர் மகேசிடம் பேசினோம், “அந்த பொதுக்கூட்டத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் வாகனங்களை மாற்று வழியில் விடும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் வைத்தோம். அதிலும் குறிப்பாக ஆம்புலன்ஸ் வந்தாலும் மாற்று வழியில் வேகமாக அனுப்பிவைக்கும்படி கூறினேன்.

அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்துக்குள் வந்தது. ஏன் என்று விசாரித்தபோது பொதுக்கூட்டத்துக்கு வந்த ஒருவர் மயங்கிவிட்டதாக கூறினர். உடனே இருக்கைகளை அகற்றி ஆம்புலன்ஸுக்கு வழிவிடும்படி கனிமொழி எம்.பி கூறினார். ஆம்புலன்ஸை வரக்கூடாது எனக்கூறுவதற்கு எடப்பாடி கூட்டம் அல்ல இது, தலைவரின் மகள் என அந்த கூட்டத்திலேயே நான் கூறினேன். வேறு எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.