• September 22, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நாளை பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று உயர்மட்டக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ அருள், வன்னியர் சங்க மாநில செயலாளர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ அருள், “தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை செய்தோம்.

ராமதாஸ், அன்புமணி

கூட்டணி அமைப்பதற்கு நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழுவால் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு, ஏற்கெனவே அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ராமதாஸ் அவர்கள்தான் முடிவு செய்வார். வருகின்ற 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ராமதாஸ் அவர்கள் விரைவில் அறிவிப்பார். அதேபோல கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விரைவில் தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸ் அவர்களைச் சந்திப்பார்கள்.

அன்புமணி தரப்பில் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்துத் தரக்கோரிய கடிதத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. பீகார் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேர்தல் ஆணையத்திடம் பொய் தகவல் கூறியிருக்கின்றனர்.

பா.ம.க-வைப் பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கட்சி இல்லை. முகவரி மாற்றம் பொய்யானது என தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருக்கிறோம். அன்புமணி தரப்பினர் கோயபல்ஸ் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மருத்துவர் ராமதாஸ் இல்லாமல் பா.ம.க-வின் வாக்குகளைப் பெற முடியாது. பா.ம.க-வின் தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் கூறவில்லை.

ராமதாஸ்

தேர்தல் ஆணையம் தவறு செய்யாது என்று நம்புகிறோம். அப்படியே தவறு செய்தாலும் அதையும் சட்டப்படி சந்திப்போம். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தைலாபுரம் வந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்திப்பதுதான் வழக்கம்.

மருத்துவர் ராமதாஸ் கைகாட்டுபவர்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக இருப்பார்” என்றார். சேலம் எம்.எல்.ஏ அருளை பா.ம.க-வின் தலைமை நிலைய செய்தித் தொடர்பாளராக மருத்துவர் நியமித்திருக்கும் நிலையில், அருள் செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *