
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது.
இதன் காரணமாக, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செப்டம்பர் 12 முதல் இடைக்கால தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்துக்கு முன்பாக புதிய தலைவரை நியமிக்க பரபரப்பாக வேலை சென்றுகொண்டிருக்கிறது.
குறிப்பாக தேர்தல் இல்லாமல் நேரடியாகத் தலைவரை நியமிக்கவிருக்கிறது பிசிசிஐ. இது தொடர்பாக ஐ.பி.எல் சேர்மன் அருண் துமால், புதிய தலைவர் பதவிக்கு நாமினேஷன் இருக்கும் என்றும், ஆனால் தேர்தலின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முன்பே கூறிவிட்டார். இந்த நிலையில், பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்கப்போகிறார் என்று தகவல்கள் கசிந்து கொண்டிருந்த நிலையில், தலைவர் பதவிக்கு அவர் நாமினேஷன் செய்திருப்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மும்பையில் இன்று, பிசிசிஐ துணைத் தலைவர் பதவிக்கு நாமினேஷன் செய்த ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம், தலைவர் பதவிக்கு மிதுன் மன்ஹாஸ் நாமினேஷன் செய்திருப்பதை உறுதிப்படுத்தினார்.
இந்திய அணிக்காக ஒரு சர்வதேச போட்டியில்கூட விளையாடாத மிதுன் மன்ஹாஸ் உள்ளூர் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ரெக்கார்ட் வைத்திருக்கிறார்.
1997 முதல் 2017 வரையிலான தனது டொமெஸ்டிக் கரியரில் டெல்லி அணிக்காக 157 முதல்தர போட்டிகளிலும், 130 லிஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆடியிருக்கிறார். இதில், முதல்தர கிரிக்கெட்டில் 27 சதங்களுடன் 9, 714 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 5 சதங்களுடன் 4,126 ரன்களும் அடித்திருக்கிறார்.

ஐ.பி.எல் கரியரைப் பொறுத்தவரையில் 2008 முதல் 2010 வரையில் டெல்லி அணியிலும், 2011 முதல் 2013 வரையில் புனே வாரியர்ஸ் அணியிலும், 2014-ல் சென்னை அணியிலும் விளையாடியிருக்கிறார். ஐ.பி.எல்லில் மொத்தமாக 55 போட்டிகளில் 514 ரன்கள் அடித்திருக்கிறார். தனது ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராகச் செயல்பட்ட மிதுன் மன்ஹாஸ், 2017 பஞ்சாப் அணிக்கும், 2019-ல் பெங்களூரு அணிக்கும், 2022 முதல் 2025 வரை குஜராத் அணிக்கும் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs