• September 21, 2025
  • NewsEditor
  • 0

பா.இரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில், கலையரசன், தினேஷ், ரித்விகா ஆகியோரின் நடிப்பில் உருவான `தண்டகாரண்யம்’ திரைப்படம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 19) திரையரங்குகளில் வெளியானது.

பழங்குடி மக்களின் வாழ்க்கையை, உரிமைகளை, அரசால் எதிர்கொள்ளும் கொடுமைகளை பொதுவெளியில் விவாதத்துக்குக் கொண்டுவந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தண்டகாரண்யம் | Thandakaaranyam

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இப்படம் குறித்த தனது பார்வையை முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில் திருமாவளவன், “இயக்குநர் அதியன் ஆதிரை அவர்களின் புரட்சிரமான இப்படைப்பு ஒரு உண்மை நிகழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு வார்ப்பிக்கப்பட்டதாகும்.

இது பழங்குடி மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தினாரால் திணிக்கப்படும் அரசப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் அதியனின் புரட்சிவனம்.

நக்சல்பாரிகளைச் சனநாயகப்படுத்தி அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்கும் முயற்சியாக இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளையும் அதன் பின்னணியில் உள்ள கசப்பான உண்மைகளையும் விவரிக்கிற ஒரு வரலாற்று ஆவணமாக இது வனையப்பட்டுள்ளது.

நக்சல்பாரிகள் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை விளக்குவதற்கான ஒரு களமாக இதனைக் கையாண்டுள்ளார் இயக்குநர்அதியன்.

ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா போன்ற வட மாநிலங்களில் வாழும் ஆதிவாசிகளின் வாழ்வாதார உரிமைகளை மீட்கவும்-காக்கவும் தம் இன்னுயிர் ஈந்து போராடிக்கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திட, இந்திய ஆட்சியாளர்கள் பல பத்தாண்டுகளாகப் பெரிதும் முயற்சித்து வருகின்றனர்.

திருமாவளவன் - VCK
திருமாவளவன் – VCK

ஆனால், மக்கள் அதனை ஏற்கவில்லை. மாவோயிஸ்டுகளை வரவேற்று ஆதரவு நல்குவதுடன், அவர்களும் மாவோயிஸ்டுகளாக மாறிக் களமாடி வருகின்றனர். இதுதான் ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த பெரும் நெருக்கடியாகும்.

இந்நிலையில், ஆட்சியாளர்கள் தமது உத்திகளை மாற்றி அமைக்கின்றனர். மக்களின் துணையோடு நக்சல்களை அழித்தொழிக்க முயன்று தோற்றுபோன ஆட்சியாளர்கள், நக்சல்கள் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு சரண்டைந்தால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்கிற திட்டத்தை அறிவித்து அதற்கென பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தனர்.

ஆனால், ஆட்சியாளர்கள் விரித்த சதிவலையில் மாவோயிட்டுகள் யாரும் சிக்கவில்லை. ஆதிவாசி மக்களும் யாரும் ஏமாறவில்லை.

இந்நிலையில் தான், ஆட்சியாளர்களின் குரூரமான செயல்திட்டம் அரங்கேறுகிறது. அதனை மிக நுட்பாமாகவும் வெற்றிகரமாகவும் காட்சிப்படுத்தி அரசின் அதிகார ஆணவத்தை அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குநர் அதியன்.

அந்தக் குரூர செயல்திட்டம் இயக்குநரின் கற்பனையோ புனைவோ அல்ல. கசப்பான – அப்பட்டமான வரலாற்று உண்மை. அதாவது, போலியான நக்சல்களை உருவாக்கி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்துப் பின்னர் அவர்கள் தப்பிக்க முயற்சித்தார்கள் எனப் போலியான மோதல்கொலைகளை நடத்தி நக்சல்களை அழித்தொழிக்கும் குரூரமான செயல்திட்டமே அவர்கள் அரங்கேற்றிய நாடகமாகும்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கென அரசே பயிற்சி முகாம்களை நிறுவி, ஆங்கே கடுமையான உடற்பயிற்சி அளித்து, அதற்கு ஈடுகொடுக்க இயலாதவர்களுக்குக் கடும் தண்டனைகள் அளித்து அவர்களை அடுத்த கட்ட பயிற்சிக்கு அணியப்படுத்துவதை மிக நுட்பமாகப் படமாக்கியிருக்கிறார்.

திருமாவளவன் - VCK
திருமாவளவன் – VCK

நிரந்தர அரசு வேலைவாய்ப்புக்காக ஏங்கும் ஒரு பழங்குடி இளைஞர், வனத்துறையில் தற்காலிகமாக மிகுக்குறைந்த சம்பளத்தில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அப்பயிற்சியில் சேர்கிறார். கதாநாயகரான அந்த இளைஞர் சந்திக்கும் கடுமையான நெருக்கடிகள், கொடூரமான இன்னல்கள் யாவும் காண்போரின் கண்களைக் கசியவைக்கின்றன.

இணை நாயகர்களாக தினேஷும் கலையரசனும் முதன்மையான பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

ஒருபுறம் மாநில அரசின் வனத்துறையினர் செய்யும் வன்கொடுகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் பழங்குடியினர், இன்னொருபுறம் ‘நக்சல்பாரிகளை ஒழிக்கிறோம்’ என்னும் பெயரில் இந்திய ஒன்றிய அரசின் துணை ராணுவத்துறையினர் திணிக்கும் அரசப்பயங்கரவாத ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

இதனை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்திப் பார்வையாளர்களையும் அந்தக் காட்டுக்குள்ளேயே பயணிக்க வைக்கிறார் இயக்குநர்.

படத்தைப் பார்த்த்திலிருந்து எனக்கு இண்டு-மூன்று நாட்கள் அந்தக் காட்டிலேயே பயணித்ததைப் போன்ற உணர்வு மேலோங்கியிருந்தது.

அடர்காடுகள் எப்படியிருக்கும் என்பதையும் அங்கே ஆதிவாசிகள் எவ்வாறு எழிலார்ந்த இயற்கையோடு இயைந்து வாழுகிறார்கள் என்பதையும் படத்தின் ஒளிஇயக்குநர் கலைநயத்தோடு நம் கண்களின் முன்னே கொண்டுவந்து களிப்பூட்டுகிறார்.

தண்டகாரண்யம் பட இயக்குநர் அதியன் ஆதிரை
அதியன் ஆதிரை

வசனங்கள், இயக்குநர் அதியன் ஆதிரையின் சிந்தனை முதிர்ச்சிக்குச் சான்றுகளாகவுள்ளன. அவர் இடதுசாரி சனநாயக முற்போக்கு சக்தியாக விளங்குகிறார் என்பதை இத்திரைப்படம் உறுதிப்படுத்துகிறது.

காதலர்களின் உரையாடல்களிலும் அதனைத் தெறிக்கவிடுகிறார்.

“ஆடைகளை உதறிவிட்டு ஆற்று நீரில் காலாற நடப்போம்” என காதலி சொல்ல; “ஆறு முடிந்த பிறகு? ” என காதலன் வினவ; “ஆறு முடிந்ததும் ஊர் வந்துவிடும், ஊர் வந்தால் உடைகள் வந்துவிடும், பின்னர் உறவு, சாதி, மதம் என எல்லாம் வந்து ஒட்டிக் கொள்ளும் ; எனவே எதுவும் வேண்டாம்; இப்படியே காட்டுக்குள்ளேயே இருப்போமே ” என்கிற பொருளில் காதலர்களின் உரையாடல்கள் நெஞ்சை அள்ளுகின்றன.

இசை இப்படத்திற்கு உயிர்ப்பூட்டுகிறது. நம் கவனத்தைச் சிதறவிடாமல் காட்சிகளை நோக்கி குவிமையப்படுத்துகிறது.

முற்போக்கான சிந்தனையுள்ள, இடதுசாரி அரசியலை வலுப்படுத்த விரும்புகிற ஒவ்வொருவரும் இத்திரைப்படத்தைக் கண்டு அதியன் ஆதிரை போன்ற இயக்குநர்களை ஊக்கப்படுத்திட வேண்டும்.

இதனைப் படைத்திட முன்வந்துள்ள நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் இதன் இசைஇயக்குநர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *