• September 21, 2025
  • NewsEditor
  • 0

நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நெல்லையில் கவின் செல்வ விக்னேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதநேய உணர்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவில் கைது செய்ய வேண்டும். சாதிய வன்கொடுமைகள், படுகொலைகள் நிறைந்த தென் மாவட்டங்களை வன்கொடுமை பகுதியாக அறிவித்து நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கையின்படி பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.  பா.ஜ.க தனது தேசியவாத அரசியலை முன்னிறுத்தி மாநில கட்சிகளை பலவீனப்படுத்துகிறது. வட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அ.தி.மு.கவை பா.ஜ.க பலவீனப்படுத்தி வருகிறது. ஒரு கட்சி நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கினால் அக்கட்சியின் பொதுச் செயலாளரை சந்திக்க வேண்டும்.

ஆனால், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அதன் தேசிய தலைவராக அமித்ஷாவும் செயல்படுகிறார்கள் எனத் தெரிகிறது. தி.மு.கவை வீழ்த்துவதே பா.ஜ.கவின் இலக்கு என்ற நோக்கத்துடன் பா.ஜ.கவின் ஓட்டுக்குழுக்களாக விஜய், சீமான் கட்சிகள் செயல்படுகின்றன.

வன்னியரசு

சீமான் திராவிட எதிர்ப்பினை முன்னிறுத்துகிறாரா அல்லது தி.மு.க எதிர்ப்பினை முன்னிறுத்துகிறாரா எனத் தெரியவில்லை. விஜய்யும் அதே வெறுப்பைத்தான் கட்டமைக்கிறாரா எனத் தெரியவில்லை. 2026 தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க 6 இடங்களில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் 10 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என என்னைப் போன்றோர் விரும்புகிறார்கள்” என்றார்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *