
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அருகில் இருக்கும் சிய்யாவரம் என்ற கிராமத்தில் குடிபோதையில் ஒருவர் செய்த காரியம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கட்டிடக் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்த பிறகு மாலையில் மது அருந்துவது வழக்கம்.
வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு அங்குள்ள மதுபான கடையில் மது வாங்கி இரவு வரை குடித்தார். பின்னர் தள்ளாடியபடி தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று அவரைக் கடித்துவிட்டது.
இதனால் குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கையில் பிடித்தார். கையில் பிடித்ததோடு, பாம்பின் தலையை வெங்கடேஷ் கடித்துத் துப்பிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பாம்பு இறந்துவிட்டது.
இறந்த பாம்பைத் தனது தோளில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் நேரடியாக படுக்கைக்குச் சென்ற வெங்கடேஷ் இறந்த பாம்பை படுக்கையில் வைத்துவிட்டு தானும் படுத்து உறங்கிவிட்டார். பாம்பின் விஷம் மெதுவாக உடல் முழுவதும் பரவியது.
இதனால் அதிகாலையில் வெங்கடேஷ் உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவரது குடும்பத்தினர் வெங்கடேஷை அருகில் உள்ள காலகஷ்தியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார்.
உடனே அவர் திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தன்னைக் கடித்த பாம்பைக் கடித்துக் கொன்று விட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வெங்கடேஷ் பற்றி கிராமம் முழுக்க பேச்சாக இருக்கிறது.