• September 20, 2025
  • NewsEditor
  • 0

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை வருத்தமுறச் செய்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் அவரின் இழப்பு அத்தனை பேரையும் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இயக்குநர் எழிலின் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் ‘அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்’ காமெடி எவர்கிரீன் காமெடி என்றே சொல்லலாம்.

அதில், நடிகர் ரோபோ சங்கருக்கும், நடிகர் ரவி மரியாவுக்கும் நடிகர் சூரிக்கும் இடையில் நடக்கும் நடிப்பு போட்டியில் காமெடி காட்சி வெற்றிப் பெற்றுவிடும்.

மிகவும் ரசித்துப் பார்க்கப்பட்ட அந்த காமெடி காட்சியில் நடித்த நடிகர் ரவி மரியா, ரோபோ சங்கரின் மறைவையொட்டி வருத்தத்தில் இருந்தார். அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

ரோபோ சங்கர்

ஒரே ஊர்காரர்:

“ரோபோ சங்கர்… இப்போ நினைத்தாலும் மனது பாரமாக இருக்கிறது. என்னை அவர் சக நடிகராகவே நடத்தியதில்லை. எப்போதும் சகோதரனாக அண்ணா அண்ணா என்றே அழைப்பார்.

இருவரும் மதுரைகாரர்கள்தான் என்பதால் ஊர்பாசமும் அதில் கலந்திருக்கும். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எங்களுடைய காமெடி காம்போ அவ்வளவு ஹிட் அடித்தது.

அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும் என அவர் தொடங்கும்போதே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

அந்தப் படத்தில் அவர் மனநலம் பாதிகப்பட்டவராக நடித்திருப்பார், ஞாபக மறதிக்காரராக நடித்திருப்பார்.

போட்டி போட்டேன்

ஆனால் உண்மையில் அவர் இரண்டுநாளும் ஷூட்டிங் ஸ்பாட்லயும் அதே மாதிரிதான் இருப்பார். அதற்கு நானே சாட்சி. அவரின் நடிப்பையும், அந்த ஆர்வத்தையும் பார்த்துதான் நான் அதில் நிறைய ரியாக்‌ஷன் கொடுத்து அவருக்கு போட்டியாக நடித்தேன்.

அந்தப் படத்தில் எனக்கும் தம்பி ரோபோ சங்கருக்கும் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அந்தக் காமெடி ரோபோ சங்கருக்கு மட்டுமல்ல எனக்கு, நடிகர் சூரிக்கு என எல்லோருக்கும் ஒரு திருப்புமுனையாகத்தான் இருந்தது.

அவர் இன்று நம்மிடம் இல்லை என்றாலும் இன்னும் 100 வருடம் அந்தக் காமெடி ரசிகர்களால் கொண்டாடப்படும் என எல்லோரும் சொல்கிறார்கள். அதுவரை ரோபோ சங்கரின் புகழ் இருந்துகொண்டே இருக்கும் என்பது என் நம்பிக்கை.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்காமெடி காட்சி
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்காமெடி காட்சி

ரோபோ சங்கருக்கான அங்கீகாரம்;

அந்தக் காமெடியைப் பார்த்து சிரித்தவர், இனி அதைப் பார்க்கும்போதெல்லாம் ரோபோ சங்கரின் மறைவு நினைவுக்கு வரும். அவர் இருக்கும்போது சிரிக்க வைத்தார்.

மறைந்தப் பிறகு கவலைகொள்ள வைத்திருக்கிறார். இதுதான் ஒரு கலைஞருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம். எளிமையாக வாழ்வதை விரும்பியவர்.

புது இயக்குநர் வந்து கதை சொன்னாலும் அவர்களுக்காக அதிகம் மெனக்கெடுவார். எதற்கும் நோ சொல்லத் தெரியாதவர். சமீபத்தில் அவரை சந்தித்தேன்.

கமல் சாரிடம் வாய்ப்பு;

காரில் அமர்ந்துக்கொண்டே 30 நிமிடங்களுக்கு மேல் பேசினோம். அப்போது அவரிடம் ‘ஒவ்வொரு வருடமும் கமல் சாரின் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டுகிறீர்களே… கமல் சாரின் தீவிர ரசிகராக உங்களுக்கும் சிறப்பாக நடிக்க வருகிறது.

இப்படி காமெடி ரோலிலேயே நடித்துக்கொண்டிருப்பதற்கு, கமல் சாரிடம் ஒரு வாய்ப்பு கேட்டுப் பார்க்கலாமே’ என்றேன்.

அதற்கு அவர், `அண்ணே அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்குனே. கமல் சாரை பார்த்து பேசிட்டோம். இந்த முறை விடக் கூடாதுனு உறுதியா இறங்கிட்டோம்னே.

நடிகர் கமல் - ரோபோ சங்கர் அவரின் மனைவி
நடிகர் கமல் – ரோபோ சங்கர் அவரின் மனைவி

கமல் சாரே என்ன ரோபோ இவ்வளவு அடம்பிடிக்கிறீங்கன்னு கேட்டார். நான் விடலையே, உறுதியாக இருந்தேன்னே…

ரோபோ உடம்ப குறைங்க-னு கமல் சாரே சொன்னார். நான் நாளே நாள்ல குறைச்சிடுறேன் சார்னு சொன்னேன்.

அதுக்கு திட்டினார்னே. அப்படிலாம் உடனே குறைக்க கூடாது. சரியா, முறையா, படிப்படியா குறைக்கனும். ஷூட்டிங்க்கு இன்னும் நாள் இருக்குனு சொன்னார்.

அடுத்து ஆண்டவர் கையால பெரிய லைஃப் இருக்குனே’ எனச் சொல்லிவிட்டுப் சென்றார்.. ஆனால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை.

இழந்துவிட்டோம்:

ஒருமுறை சொந்தப் படம் எடுக்க அவரிடம் பேசினேன். அப்போதுகூட ‘சம்பளம் பத்தி பேசாதிங்கனே… எப்போ ஷூட்டிங்னு மட்டும் சொல்லுங்க’-னு சொன்னார்.

காலத்தால் அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்க முடியாதவர். என் மனதுக்கு நெருக்கமானவரை இழந்துவிட்டோம் என்பதில் மிகப் பெரும் வருத்தம்.

நடிகர் ரவி மரியா
நடிகர் ரவி மரியா

அவருக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சையில் இருந்து, மீண்டு வந்தபோது, ‘அண்ணே ரோபோ சங்கர் அவ்வளவுதான் போயிட்டானு சொன்னாங்கள்ல… இப்போ எப்படி இருக்கேனு பாருங்கனே’ என உடல் நன்கு தேரியதைக் காண்பித்துப் பேசினார்.

அப்போதும்… இருந்தா ரொம்ப ஒல்லியாகிடுறீங்க இல்லைனா ரொம்ப குண்டாகிடுறீங்க. இப்படிலாம் இருக்கக் கூடாது நார்மலா மெயிண்டன் பண்ணுங்கனு சொல்லிருந்தேன்.

ஆனால் அதற்குள் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது. ஒரு நல்ல மனிதரை இழந்திருக்கிறோம். அவர் ஆன்மா சந்தியடையட்டும்” என உருக்கமாகப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *