
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
மனிதர்கள் மற்றும் நாய்கள் மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே இணைந்து வாழ்ந்து வருகின்றனர். உதாரணமாக, பஞ்சாப் மாநிலம் ரோபரில், சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக்குரிய ஒரு கல்லறையில் மனித உடலுடன் புதைக்கப்பட்ட நாயின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
நாய்கள் நம்மை பாதுகாக்கின்றன, நமக்கு உணர்ச்சி ரீதியான ஆதரவு மற்றும் தோழமை வழங்குகின்றன. அவை நம்பிக்கையானவை, நட்பானவை மற்றும் புத்திசாலித்தனமானவை.
ஆனால், இப்போது வேகமான நகர்ப்புறமயமாக்கம், குப்பையை முறையற்ற முறையில் வெளியேற்றுவது, மற்றும் குறைவான தடுப்பூசி நடவடிக்கைகள், விழிப்புணர்வு இல்லாமை, உணவு அதிகமாக வீணாக்கப்படுவது, சமூக சூழ்நிலை (societal ecosystem imbalance) அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகிய காரணங்களால் பெருநகரங்களில் மனிதன் – விலங்கு மோதலை அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் ரேபிஸ் (Rabies) நோயால் ஏற்படும் மரணங்கள் 80% க்கும் மேல் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில் மட்டும் 17,000-க்கும் (As per animal birth control report) மேற்பட்ட நாய் கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் தெரு நாய்கள் இரண்டையும் உள்ளடக்கியவை.
இவை சென்னை நகரிலேயே உள்ள தரவுகள். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன; தெரு நாய் கடி சம்பவங்களை சரியாக கணக்கெடுத்தால், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றுமடங்கு அதிகமாக இருக்கும்.
காரணங்கள்
1.வேகமான நகர்ப்புறமயமாக்கம்
பசுமை புரட்சி மற்றும் உலகமயமாக்கலுக்கு முன்பு, மனிதர்கள் தேவையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டனர்.
ஆனால் இப்போது உணவுப் பொருட்கள் மிகுதியாக கிடைப்பதால், அதிகளவில் உணவு வீணாகிறது. மனிதர்களின் மனநிலையில் உணவுகள் வீணானால் கண்டிப்பாக நாய்களுக்கு வைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எப்போதும் உள்ளது. அப்படி வீணான உணவை தெருநாய்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இதன் விளைவாக நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உணவு எளிதில் கிடைப்பதால், அந்த இடத்தில் உணவை கொடுக்கும் மனிதர்களிடம் நாய்கள் நம்பிக்கையோடு இருப்பதுடன், அங்கு வெளியில் வரும் அந்நியரை எதிர்த்து கடுமையாக நடக்கின்றன.

2. வெளிநாட்டு நாய் இனங்களை கைவிடுதல்
பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு நாய் இனங்களைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அவற்றை வாங்கி வளர்க்கின்றனர். அவை முழு வளர்ச்சியடைந்த பின், இனப்பெருக்க மையங்களைப் பெறுவது கடினமாகிறது.
இதனால் அவை உள்ளூர் தெரு நாய்களுடன் இணைக்கப்படுகின்றன. வெளிநாட்டு நாய் மற்றும் தெரு நாய் இணைந்து பிறக்கும் குட்டிகள் முற்றிலும் மாறுபட்ட மரபணு தன்மைகளைக் கொண்டிருப்பதால், அவை அதிகக் கொடூரமானவைகளாகவும், நோய்களுக்கு எளிதில் ஆளாகக்கூடியவைகளாகவும் இருக்கும்.
இதனால் மனிதர்கள்மீது தாக்குதல்கள் அதிகரித்து, மோதல்கள் உருவாகின்றன. மேலும், வேலை மாற்றம், உரிமையாளர் மரணம், அல்லது நாய்களின் கொடூரமான இயல்பு காரணமாகவும் அவற்றை கைவிடுகின்றனர்.
3.விலங்குகளின் நடத்தை பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது
மனிதர்களைப் போலவே, நாய்களுக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளன; அவற்றின் நடத்தையும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, பரப்பளவு (territory) பாதுகாப்பு நடத்தை பெரும்பாலும் மோதல்களுக்கு வழிவகுக்கிறது.
அதிகரிக்கும் குப்பை மேடுகள் நாய்களை ஈர்க்கின்றன, இதனால் நாய்களுக்கு இடையே நடக்கும் புவியில் பரப்பு பகிர்வில் (territory share) அது மனிதர்களுடனான மோதலுக்கும்-வழிவகுக்கிறது.

4.மருத்துவ நிபுணர்கள் மற்றும் வசதிகள் பற்றாக்குறை
இந்தியாவில் விலங்குகள் சார்ந்த மருத்துவ படிப்பில் ஒரு பிரச்சினை என்னவெனில், பெரும்பாலும் MBBS படிக்க இடம் கிடைக்காதவர்கள் விலங்கு மருத்துவத்துக்கு வருகின்றனர். இதனால் தரமான விலங்கு மருத்துவ சேவையும், அடிப்படை வசதிகளும் குறைவாக உள்ளன. மாவட்ட விலங்கு மருத்துவமனைகளும் கூட, பெரும்பாலும் பசு, ஆடு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விலங்குகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
நாய்களை எவ்வாறு கையாள வேண்டும், தடுப்பூசி போன்ற அடிப்படை விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இவை அனைத்தும் மனிதன்-நாய் இணை வாழ்வை பாதிக்கின்றன; இதனால் மனிதன்-விலங்கு மோதல்கள் உருவாகின்றன.
5.தவறான கருத்தடை முறைகள் (Sterilisation)
அரசு நடத்தும் செல்லப்பிராணி மருத்துவமனைகள் பெரும்பாலும் வசதிகளும், தகுதி வாய்ந்த பணியாளர்களும் இன்றி இயங்குகின்றன. இதனால் தவறான அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த கருத்தடை கொள்கை இல்லை; அது முறையான திட்டமிடலின்றி, புகார் வந்தால்தான் செய்யப்படும் (not in preventive care aspects) முறையில் செயல்படுகிறது.
மேலும், நாய்களை கொடூரமான முறையில் பிடிப்பதும், அறுவை சிகிச்சைக்கு பின் பிடிக்கப்பட்ட இடத்திற்கு திருப்பி விடாமல் வேறு இடங்களில் விட்டுவிடுவதும், நாய்களுக்கு இடையேயான பகுதி மோதல்களை அதிகரிக்கிறது.

6.இயற்கை காரணிகள்
கோடை மற்றும் குளிர்காலங்களில், ஏற்ற காலநிலை காரணமாக தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. மேலும், பண்டிகை காலங்களில் மீதியாகும் உணவு மற்றும் சரியான குப்பை மேலாண்மை இல்லாமை காரணமாகவும் நாய் தொகை அதிகரிக்கிறது.
நாய்கள் வருடத்திற்கு இரண்டு முறை குட்டிகளைப் பெறுகின்றன. ஒரு நாய் கருத்தடை செய்யாத பெண் நாய் மற்றும் அதன் சந்ததிகள் ஆறு ஆண்டுகளில் 67,000 நாய்கள் வரை பிறப்பதற்கு வழிவகுக்கலாம். இந்த இயற்கை மற்றும் மனித காரணிகள் இணைந்து நாய் தொகையை அதிகரித்து, உணவு, குடியிருப்பு போன்றவற்றிற்கான நாய்கள் இடையேயான மோதல்களை உருவாக்குகின்றன.
தீர்வு நடவடிக்கைகள்
1. சரியான தடுப்பூசி முறைகள்
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, தெரு நாய் பிரச்னையை சமாளிப்பதற்காக தெரிந்த ஒரே வழி பிடித்து கொல்வது தான். ஆனால், இந்தியாவில் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு “ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா” (Blue Cross of India) உடன் இணைந்து, Animal Birth Control (ABC) திட்டத்தை சென்னையில் செயல்படுத்தியது. இது தெரு நாய்கள் பிரச்சினையை குறைப்பதற்கான முதல் முயற்சியாகும்.

இந்த வெற்றிகரமான செயல்படுத்தலின் பின், இந்திய அரசு, இந்திய விலங்கு நல வாரியத்தின் (Animal Welfare Board of India – AWBI) வழிகாட்டுதலின் கீழ், பிராணிகள் மீதான கொடுமையைத் தடுக்கச் சட்டம், 1960 (Prevention of Cruelty to Animals Act, 1960) படி ABC (Animal Birth control rule (Dogs) Rules எனப்படும் விதிகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
எனவே, இன்றைய அவசரத் தேவையாக ABC விதிகள் மாநில அளவில் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். மேலும், நாட்டின் அனுபவம் வாய்ந்த அரசு சாரா அமைப்புகள் (NGOs) உடன் இணைந்து வலுவாக செயல்படுத்தப்பட வேண்டும்.
2.குப்பை மேலாண்மை
குப்பை மேலாண்மை ஒரு மிக முக்கியமான காரணியாகும். சென்னையில் வீடு தோறும் குப்பை சேகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இன்னும் பலர் தங்கள் வீடுகளின் முன் குப்பை மூட்டைகளை விட்டு செல்கின்றனர். இதனால், குப்பைகள் நாய்கள் அல்லது காகங்களால் சிதறடிக்கப்படுகிறது, இதன் விளைவாக மோதல்களுக்கு உகந்த சூழல் உருவாகிறது. எனவே, மக்கள் சரியான குப்பை அகற்றல் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம்.
3.தெரு நாய்களுடன் பாதுகாப்பான தொடர்பு குறித்து பொது மக்களுக்கான கல்வி
சாலையில் பாதுகாப்பு குறித்து நாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைப் போலவே, நாய்களின் நடத்தை குறித்து மக்களுக்கு அறிவூட்ட வேண்டும், இதன் மூலம் மோதல்களைத் தவிர்க்கலாம்.
அரசு, அரசு சாரா அமைப்புகளின் (NGOs) உதவியுடன், நாய் கடியைத் தடுக்கும் விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம்கள், மற்றும் முதுதவிகள் (First Aid) குறித்த பயிற்சி மீது கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாய் கடித்த பின் காயத்தைச் சரியாக சுத்தம் செய்வது போன்றவை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இடையே பரவலாகக் கற்றுத்தரப்பட வேண்டும்.
மேலும், அரசாங்கம் பெரும் அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ரேபிஸ் ம் (Rabies) தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

4.மனிதர்களுடன் இடத்தை பகிர்ந்து கொள்வது வேகமான நகர்ப்புறமயமாக்கலில், அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் காரணமாக சுவர்களால் சூழப்பட்ட குடியிருப்புகள் உருவாகின்றன. இதனால் விலங்குகளுக்கான தங்குமிடம் குறைகிறது. இதன் விளைவாக, மனிதர்கள் நாய்களிலிருந்து பிரிந்து விடுகின்றனர். இந்த தனிமைப்படுத்தல், குறிப்பாக கர்ப்ப காலத்திலும் இனப்பெருக்க காலத்திலும் நாய்களுக்கு அச்சத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இது மனிதர்களை கடிக்க வழிவகுக்கிறது.
இந்த பிரச்னையைத் தடுக்க, மனிதர்களுக்கு இருப்பிடம் கொடுப்பது போலவே, அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் இணைந்து நாய்களுக்கும் பாதுகாப்பான இருப்பிடங்கள் (shelter homes) உருவாக்க வேண்டும்.
மேலும், நகரங்களில் நாய்கள் மற்றும் வாகனங்கள் மோதுவது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது. இதைத் தடுக்க ஒளி பிரதிபலிக்கும் நீல நிற கழுத்துப்பட்டா (Reflective Blue Collars) போன்ற புதுமையான தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டும்.
5.மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார அமைப்பு – One Health Approach
அரசாங்கம், தற்போது உள்ள சுகாதார கொள்கைகளில் விலங்குகளையும் சேர்க்க வேண்டும். மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் தடுப்பு, சிகிச்சை, மற்றும் மீளுருவாக்கக் கொள்கைகள் தேவைப்படுகிறது. ஏனெனில், நாளுக்கு நாள் மனிதர்களுக்கு பரவும் விலங்கு நோய்கள் (zoonotic diseases) அதிகரித்து வருகின்றன.
சுற்றுச்சூழல் சமநிலை சீர்குலைவால் தான், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல், ரேபிஸ் (Rabies) போன்ற ஆபத்தான நோய்களைப் பரப்புவதற்கான முக்கிய காரணிகள் ஆகின்றன.
எனவே, மாநில அரசு, உள்ளாட்சி அரசு, அரசு சாரா அமைப்புகள் (NGOs), மற்றும் குடிமக்கள் அமைப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு, மனிதர்கள் மற்றும் விலங்குகள் அமைதியாகவும் நிலையான முறையிலும் இணைந்து வாழ்வதற்கான வலுவான சூழலை உருவாக்க வேண்டும். ஏனெனில் கவிஞர் அறிவு என்சாய் என்சாமி பாடல் வரியில் கூறியது போல், நாய் நரி பூனைக்கெல்லாம் இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி….. இங்கு எதுவும் மனிதர்களுக்கான மட்டும் அல்ல.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!