
காதல் என்றாலே வெறுப்பாகும் நெல்சனிடம் (கவின்) வந்து சேர்கிறது ஒரு பழங்கால புத்தகம். அதிலிருந்து யாரேனும் ‘கிஸ்’ அடிப்பதைப் பார்த்தால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பார்க்கும் திறனும் அவருக்கு வந்துவிடுகிறது.
தன்னிடம் இந்தப் புத்தகம் வந்து சேர்வதற்கு காரணமாக இருந்த சாராவிடம் (ப்ரீத்தி அஸ்ராணி) பழகத் தொடங்குகிறார். அது காதலாக மாற, இடையில் வில்லனாக நெல்சனின் சூப்பர்பவரே குறுக்கே வர, இறுதியில் காதலர்கள் ஒன்றிணைந்தார்களா என்பதே நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘கிஸ்’ படத்தின் கதை.
பெரிய மெனக்கெடல் தேவைப்படாத ரோலில் வீராப்பு மேனரிசத்துடன் கச்சிதமாகப் பொருந்துகிறார் கவின். எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்பவருக்கு காமெடியில் மட்டும் கவனம் தேவை. நாயகி பாத்திரம் பெரிய டீடெய்லிங்குடன் எழுதப்படவில்லை என்றாலும் தன் நடிப்புத் திறனையும், நடனத் திறமையையும் அழகாகப் பதிவு செய்கிறார் ப்ரீத்தி அஸ்ராணி! காமெடி காம்போவாக நிறையக் காட்சிகளைக் கரை சேர்த்திருக்கிறது மிர்ச்சி விஜய் – விடிவி கணேஷ் இணை.

நாயகனுடன் இவர்கள் அடிக்கும் டைம்மிங், ரைம்மிங் கலாட்டாக்கள் ரகளை! சீனியர் நடிகைகள் லிஸ்ட்டில் தேவயாணி, கௌசல்யா ஆகியோரின் மேக்கப், உடைகள் மற்றும் விக்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கவினின் அப்பாவாக ராவ் ரமேஷ், ப்ரீத்தி அஸ்ராணியின் அப்பாவாக கல்யாண், கௌரவத் தோற்றத்தில் பிரபு என மற்றவர்கள் ஓகே!
ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் ‘கைட் ஃபெஸ்டிவல்’, இரவு நேரக் காட்சிகள் கலர்ஃபுல் ட்ரீட்! க்ளைமாக்ஸ் தீ விபத்து காட்சிகளின் கிராபிக்ஸ் தரம், டிரோன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஆகியவை அருமை. ரொமான்டிக் காமெடிக்குத் தேவையான நிதானத்தையும் மிதவேகத்தையும் படத்தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார் ஆர்.சி.பிரணவ். ஜென் மார்ட்டின் இசையில் க்ளைமாக்ஸ் பாடல் பாஸாக, காதல் தோல்வி பாடல் ஸ்பீட்பிரேக்கராகி இருக்கிறது. ஆனால் பின்னணி இசையில் படம் முழுவதும் நிறைந்து காட்சிகளின் உணர்வுகளை ஆழமாக்கியிருக்கிறார்.

ஒரு வழக்கமான, ஜாலியான ரொமான்டிக் காமெடியில் ஃபேண்டஸி பூச்சை பூசி புதுமையான படைப்பாகக் கொண்டு வர முற்பட்டிருக்கிறார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன். படத்தின் தொடக்கத்தில் வரும் ஃபேண்டஸி ராஜா கதை, அதை வைத்தே 2025-ல் நாயகனின் பாத்திரத்தை கனெக்ட் வைத்த விதம் போன்றவை ஸ்மார்ட்! ரத்தின சுருக்கமாக ‘வாட்ஸ்அப்’ சாட் அளவே எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் ப்ளஸ்! ஃபேண்டஸி படம் என்றாலும் முழுக்க அந்த ஏரியாவுக்குள் போகாமல், நாயகனுக்கு இருக்கும் குடும்பப் பிரச்னை, காதல் மீதான அவநம்பிக்கை என டிராமாவில் கபடி ஆடியது ஃபேண்டஸி உலகம் தொடர்பான லாஜிக் பிரச்னைகளை மறக்கடித்திருக்கிறது.
நாயகனின் ‘காதலுக்கு எதிரி’ அலப்பறைகள், நண்பர் மிர்ச்சி விஜய் – மருத்துவர் விடிவி கணேஷ் காமெடி காட்சிகள் முதல் பாதியைக் கலகலப்பாக்கியிருக்கின்றன. இரண்டாம் பாதியில் இதே காம்போவுடன், 2கே கிட்ஸைக் கலாய்த்து வரும் திருமண மண்டப காட்சிகள் மிகை நடிப்பு என்றாலும் ஜாலி, கேலி டிராமா! இடைவேளையில் எட்டிப் பார்க்கும் அந்த சீரியஸான பிரச்னையும் சுவாரஸ்யத் திருப்பம்!

ஆனால் ராவ் ரமேஷ் – கௌசல்யா கதையை அப்படியே ‘ஆஹா’ படத்தின் ரகுவரன் – சுகன்யா கதையிலிருந்து எடுத்து வைத்தது எல்லாம் சரியான போங்காட்டங்கண்ணா! நாயகன் – நாயகி காதலில் விழுவதற்கும் இன்னும் வலுவான காரணங்களை முன்வைத்திருக்கலாம். 2கே கிட்ஸை எல்லாம் கலாய்த்துவிட்டு, நாய்களை வைத்து வரும் 80ஸ் சினிமா கணக்கான ரொமான்டிக் டிராக்கெல்லாம் ‘வெரி ராங் ப்ரோ!’. க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட விதம் மெர்சல் என்றாலும், படம் இப்படித்தான் நகரும், இப்படித்தான் முடியும் என்பதெல்லாம் சுலபமாகக் கணித்துவிடும் அளவுக்கே இருப்பது ஏமாற்றமே!
ஃபேண்டஸியும் நகைச்சுவையும் க்ளிக்காவதால் வழக்கமான ரொமான்டிக் காமெடியாக மாறாமல் தப்பித்திருக்கிறது இந்த ‘கிஸ்’.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…