
தூத்துக்குடி: அதிமுகவுக்கு அமித்ஷா வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கே.சங்கரன், ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது: தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகிறது பாஜக அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார். லண்டனுக்கு சென்று தான் அண்ணாமலை அரசியல் படிக்க வேண்டுமா? இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம்.