
நாகையிலிருந்து திருவாரூர் நோக்கி விஜய் பயணம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கடந்த வாரம் முதல் சனிக்கிழமை தோறும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டார்.
அதன்படி, தனது சுற்றுப்பயணத்தைக் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 13) முதல் மாவட்டமாக திருச்சியிலிருந்து தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது வரமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் நோக்கி இன்று (செப்டம்பர் 20) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிற்பகல் 1 மணியளவில் நாகப்பட்டினம் புத்தூரில் தனது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், “மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது நமது கடமை. இதே நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் குரல் கொடுத்தேன்.
எனக்குப் பரப்புரை மேற்கொள்ள விதிக்கும் கட்டுப்பாடுகள் மாதிரி மோடி, அமித் ஷாவுக்கு இப்படி கட்டுப்பாடு விதிப்பீர்களா?
ஏன் மக்களை சந்திக்க ஏன் தடை விதிக்கிறீர்கள்? இனி தடை விதித்தால் மக்களிடம் நேரடியாகச் சென்று அனுமதி கேட்பேன்.
பூச்சாண்டி வேலை வேண்டாம், தேர்தலில் மோதி பார்ப்போம். 2026 தேர்தலில் இருவருக்கு இடையேதான் போட்டி” என்று கூறி திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடைசி இரு தேர்தல்களாகப் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் தெற்கு வீதியில் தவெக தொண்டர்களிடத்தில் விஜய் பரப்புரையாற்றவிருக்கிறார்.