• September 20, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று நாகப்பட்டினத்தில்  ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில்’ மக்களை சந்தித்தார்.

அங்கு அவர் பேசியதின் முழுமையான எழுத்து வடிவம் இங்கே:

 விஜய்,  “அண்ணாவுக்கு வணக்கம்;பெரியாருக்கு வணக்கம். என் மனதுக்கு நெருக்கமான நாகை மண்ணிலிருந்து பேசுவது மகிழ்ச்சி. என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்றும் ஒரு மீனவ நண்பனாக இருக்கும் விஜயின் அன்பு வணக்கம். கப்பலில் இருந்து வந்து இறங்கும் பொருட்களை விற்க அந்திக்கடை என்று அப்போதெல்லாம் நாகப்பட்டினத்தில் இருக்கும் என்று கேள்வி பட்டு உள்ளேன் எந்தப் பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் பகுதிதான் நாகப்பட்டினம்.

மதவேறுபாடு இல்லாத சமூக சமத்துவத்துவத்துக்கும் பெயர் போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழும் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம். தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம்; ஆனால் நவீன வசதியுடன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகள், குறிப்பாக அதிக குடிசைகள் கொண்ட மாவட்டமாகவும் நாகப்பட்டினம் தான் உள்ளது.

இந்த முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்கு முறையில் பேசியதை கேட்டு கேட்டு காதில் இருந்த ரத்தம் வந்தது தான் மிச்சம் இவர்கள் ஆண்டது போதாதா? மக்கள் தவியாய் தவிக்கும் தவிப்பு போதாதா? இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தைப் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் நான் பேசியது அவ்வளவு பெரிய குற்றமா?

மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நம்முடைய கடமை.  நம்முடைய உரிமை. நான் என்ன இன்று நேற்றா அவர்களுக்காக குரல் கொடுக்கிறேன்,  இதே நாகப்பட்டினத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2011 பிப்ரவரி 22 ஆம் ஆண்டு மீனவர்கள் தாக்கப்பட்டதற்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நான் வந்து கலந்து கொண்டேன், நான் நாகப்பட்டினத்திற்கு வருவது புதிதல்ல.

மக்கள் இயக்கம் டூ தமிழக வெற்றிக் கழகம்

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து இன்று நிற்கிறேன்.இன்றும் அன்றும் என்றும் மக்களுக்காக நிற்பது தான் எனது கடமை.

மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே நேரத்தில் நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை இல்லையா?

மீனவர்களின் உயிர் எந்த அளவு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை தமிழர்களுடைய உயிரும் வாழ்வும் நமக்கு மிக முக்கியம். மீனவர்கள் படும் துயரைப் பார்த்து பெரிய கடிதம் எழுதிவிட்டு பிறகு அமைதியாக இருப்பதற்கு நாம் உண்ணும் கபட நாடகமாடும் திமுக கிடையாது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.jpeg

நாம் பாசிச பாஜக அல்ல

மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நமது மீனவர்கள் தமிழக மீனவர்கள் இப்படி பிரித்து பார்த்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக இல்லை. நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதே நமது முக்கியமான எண்ணம்.

நாகப்பட்டினத்தில்  மண்வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும் இதனால்  மீனவர்களின் வாழ்வாதாரமும் விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிக்காமல் இருக்கும்.

கடலோர கிராமங்களை  மண் அரிப்புகளிலிருந்து பாதுகாக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாப்பதை காட்டிலும் இந்த அரசுக்கு முக்கிய பணி சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும்,சொந்த குடும்பத்தின் சுயநலமும் தான் 

இங்கு உள்ள மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது காவிரித் தண்ணீரை கொண்டு வந்து மக்களின் தாகத்தை இந்த அரசு தீர்த்ததா? அதற்கு இந்த அரசு தீர்வு கண்டதா? பாரம்பரிய கடல் சார்ந்த இந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்தார்களா?

மீன் சம்பந்தமான எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை வேலைவாய்ப்பு கொண்டு வரும் வகையில் தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகை மக்கள் சந்திப்பு.jpeg

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?

வெளிநாடு சென்று டூர் போயிட்டு வரும்போது எல்லாம் அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்ன சிரித்துக் கொண்டே சொல்கிறார் முதல்வர். சிஎம் சார் மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா?

வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை என இங்கு உள்ள சுற்றுலா தலங்கள் எல்லாம் கொஞ்சம் மேம்படுத்தலாம் அதை செய்தீர்களா? வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதிக்கான வசதிகள் செய்து கொடுக்கலாம் செய்தார்களா? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் இல்லையாம், தெரியுமா?

நாகப்பட்டினம் புது பேருந்து நிலையத்தையாவது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து உள்ளார்களா? நாகப்பட்டினம் ரயில்வே வேலையை துரிதமாக முடிக்கலாம் செய்தார்களா?

இங்கு ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் மில்,  ரயில் பெட்டி தொழிற்சாலைகள் மூடியதை மீண்டும் திறந்தால் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும் ஏன் அதைப்பற்றி சிந்திக்கவில்லை?

மேலக்கோட்டை வாசல் மேம்பாலம் கட்டி 50 வருடங்கள் ஆகிறது அதனை முறையாக மேம்படுத்தலாம், செஞ்சாங்களா? தஞ்சாவூர் –  நாகப்பட்டினம் நெடுஞ்சாலை வேலை பல ஆண்டுகளாக நடைபெறுகிறது அதனை வேகமாக செய்யலாம் செய்தார்களா?

நெல் மூட்டைகள் மழை காலங்களில் நனைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் அதற்கு ஒரு குடோன் கட்டி தந்தார்களா?தேர்தலுக்கு முன்பு  இதையெல்லாம் செய்வோம்  என்று சொன்னாங்களே செஞ்சாங்களா?

இவை எதையுமே செய்யாமல் செய்ததாக பெருமையாக சொல்கிறார் முதல்வர்.

சனிக்கிழமை பயணம் ஏன்?

மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம் என்ற விமர்சனம் வந்தது. உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளா பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.

அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான் ஓய்வு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்தோம். என் மக்களை என் சொந்தங்களை சந்திப்பதில் எத்தனை கட்டுப்பாடுகள் அதற்கான காரணங்களைக் கேட்டால் சொத்தையான காரணங்களாக இருக்கும்.அதைப் பேசக்கூடாது இதைப் பேசக்கூடாது என பல்வேறு காரணங்கள்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகை மக்கள் சந்திப்பு

ஆர்.எஸ்.எஸ் தலைவர் வந்தால் இப்படி செய்வீர்களா?

அரியலூர் செல்வதற்கு முன்பாகவே மின்தடை,  திருச்சியில் பேச செல்லும்போது ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்டு, பிரதமரோ,  உள்துறை அமைச்சரோ ஆர் எஸ் எஸ் தலைவரோ இங்கு வந்தால் இது போன்ற கண்டிஷனும், பவர் கட்,  ஒயர் கட்,  போன்றவற்றை செய்வீர்களா…பண்ணி தான் பாருங்களேன் உங்க பேஸ்மென்ட் அதிரும் இல்ல… நீங்க தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே

இந்த அரசை நானும் என்னவோ ஏதோ என்று நினைத்தேன் ஆனால் காமெடியாக இருக்கிறது இந்த அரசாங்கம். நேரடியாக கேட்கிறேன் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா?அதற்கு நான் ஆள் இல்லை அப்படி என்ன செய்வீர்கள்?

கொள்கையை பெயரளவில் வைத்து குடும்ப ஆட்சி நடத்தும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்.

என்ன பெரிதாக நாங்கள் கேட்டு விட்டோம் மக்கள் வந்து நிம்மதியாக வந்து பார்த்து செல்வதற்கு அமைதியான ஒரு இடம்.அதை நாங்கள் தேர்வு செய்து அதற்கு நாங்கள் அனுமதி கேட்கிறோம். ஆனால் அந்த இடத்தை விட்டுவிட்டு மக்கள் எங்கு நெருக்கடியோடு நிற்பார்களோ அந்த இடமாக பார்த்து நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள் உங்களுடைய எண்ணம் தான் என்ன சார்?

நான் மக்களை சந்திக்கக் கூடாது அவர்களுடன் பேசக்கூடாது,  அவர்களுடைய குறைகளை கேட்கக்கூடாது,  அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது,  என்ன தான் சார் உங்கள் எண்ணம்.  சரி ஒரு அரசியல் தலைவன் என்பதை எல்லாம் மறந்து விடுங்கள் ஒரு சாதாரண ஒரு தமிழ்நாட்டு மண்ணோட ஒரு மகனாக தமிழ் மக்களுடைய சொந்தக்காரனாக, என் மக்களை என் குடும்பத்தை என் சொந்தங்களை நான் பார்க்க போனால் என்ன பண்ணுவீர்கள்…. அப்போதும் தடை போடுவீர்களா.. வேண்டாம் சார் இந்த அடக்குமுறை,  அராஜக எல்லாம் வேண்டாம் நாம் ஒன்றும் இங்கு தனியாள் கிடையாது,  மாபெரும் மக்கள் சக்தி உடைய பிரதிநிதி,  மாபெரும் பெண்கள் சக்தி உடைய சகோதரன்,  மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம் சார் மறுபடியும் சொல்றேன் 2026ல் இரண்டு பேருக்கு தான் இங்கு போட்டியே ஒன்று தவெக மற்றொன்று திமுக.

தில்லா, கெத்தா தேர்தலை சந்திக்க வாங்க

இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுறதையெல்லாம் விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார். பாத்துக்கலாம் சார் கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வச்சு தமிழகத்தை கொள்ளை அடிக்கும் நீங்களா? அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்குள் ஒருத்தனாக இருக்கும் இந்த விஜய்யா?? பார்த்துக்கலாம் சார்.

இனிமே இது போன்ற தடைகள் எல்லாம் போட்டீர்கள் என்றால் நான் நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்டுக்கொள்கிறேன் மக்களே நீங்கள் சொல்லுங்கள் நான் உங்களை பார்க்க வரக்கூடாதா??  நான் உங்களிடம் பேசக்கூடாதா?? உங்களுடைய குறைகளை கேட்க கூடாதா?? உங்களுக்காக நான் குரல் கொடுக்கக் கூடாதா?? 

இப்படி நமக்கு எல்லாம் தடையா போடுறாங்களே இந்த திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா?  உங்க நல்லதுக்காக இருக்கும் உங்க தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைய வேண்டுமா??  சத்தமா… சத்தமா… கேட்டுச்சா மை டியர்……. நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல அவருக்கு ஆசையாக பாசமாக கூப்ட்டா பிடிக்கலைனு ஏன் மறுபடியும் … கேட்டுச்சா சிஎம் சார்…. இந்தப் போர் முழக்கம்  ஒரு நிமிடம் கூட உங்கள  தூங்க விடாது, உங்களை துரத்திக் கொண்டே வரும்… உறுதியோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *