
சென்னை: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்து, காசா மீதான போரைத் தொடங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றுவதுதான் தன்னுடைய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்து போரை நீட்டித்து வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரைத் தடுக்க வலியுறுத்தி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. புதுப்பேட்டை லேங்க்ஸ் தோட்டச் சாலையில் தொடங்கிய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது.