
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல கெடுபிடிகளை விதித்து வருகிறார்.
இதையடுத்து, அவர் தற்போது ‘தி ட்ரம்ப் கோல்டு கார்டு’ விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது அமெரிக்காவில் பெருமளவில் முதலீடு செய்ய விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சிறந்த வாய்ப்பு.
தனிநபர், கார்ப்பரேசன் என்ன செய்ய வேண்டும்?
இந்த விசாவைப் பெற விருப்பமுள்ள தனிநபர்கள் 1 மில்லியன் டாலர்களும், கார்ப்பரேஷன்கள் ஒரு நபருக்கு 2 மில்லியன் டாலர்களும் செலுத்த வேண்டும்.
இதற்கு செலுத்தப்படும் அனைத்து தொகையும் நேரடியாக அமெரிக்காவின் சிறப்பு கஜானாவிற்குச் சென்றுவிடும். இது அமெரிக்காவின் வர்த்தகத்தைப் பெரிதும் ஊக்கப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பதாரர்கள் முன்னர் காட்டிலும் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அரசு கூறுகிறது.
ஏன் இந்தத் திட்டம்?
அமெரிக்காவில் லட்சக்கணக்கான சட்டத்திற்குப் புறம்பான மக்கள் குடியேறி உள்ளனர். இதைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்த மாதிரியான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் 90 நாட்களுக்கு இந்தக் கார்டிற்கான மொத்த நடைமுறைகளும் தெளிவுபடுத்தப்படும்.
ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
ட்ரம்ப் தனது பதிவில், ‘இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு மிக விரைவில் 100 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும். இது வரிக் குறைப்பிற்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும், நமது கடன்களை அடைக்கவும் உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
