
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.12 கோடியில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி சார்பில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நாகேஸ் வரராவ் பூங்கா பாரமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.12.22 கோடியில் மேம்பாட்டு பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
4 ஏக்கர் பரப்பளவு: இப்பூங்கா 1949-ம் ஆண்டு அக்.20-ம் தேதி அப்போதைய மதராஸ் மாகாணத்தின் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவால் திறக்கப்பட்டது. அப்பகுதியில் வசித்த சுதந்திரப் போராட்ட வீரரான நாகேஸ்வர ராவ் பெயரால் இப்பூங்கா அழைக்கப்படுகிறது. சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை வளம் நிறைந்த இந்த பூங்காவின் மொத்த பரப்பளவு சுமார் 4 ஏக்கர் ஆகும்.