
புதுடெல்லி: ஆகம கோயில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக காரைக்குடி கோவிலூர் மடாலயத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகம விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக்கோரி அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோயில்களையும், ஆகமம் அற்ற கோயில்களையும் கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்தது. அத்துடன் ஆகமம் அல்லாத கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட்டது.