• September 19, 2025
  • NewsEditor
  • 0

நேபாளம் நாட்டில் நடந்த ஜென் Z போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் அரசியலமைப்பு தினமான வெள்ளிக்கிழமை (செப் 19) முதன்முறையாக பொது அறிக்கையை வெளியிட்ட முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, அதில் இந்தியாவை மறைமுகமாக சாடியதுடன் சீனா உடனான உறவு குறித்தும் எழுதியிருக்கிறார்.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், நேபாளம் அரசியலமைப்பை ஏற்க பல தடைகளைக் கடந்ததாகக் கூறிய ஒலி, “நேபாளிகளால் நேபாளிகளுக்காக எழுதப்பட்ட எதிர்கால வரி” என அரசியலமைப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளம்

அதில், “அரசியலமைப்பு ‘முற்றுகை (Blockade)’ மற்றும் இறையாண்மை மீதான பல சவால்களைக் கடந்து நிறைவேற்றப்பட்டது” என எழுதியதன் மூலம் 2015ம் ஆண்டு நடந்த முற்றுகையை நினைவுகூறுகிறார். இந்த முற்றுகைக்கு இந்தியாதான் காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2015 Nepal Blockade

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளம் நாட்டின் அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது முதல் பிப்ரவரி 2016 வரை நேபாளத்தின் தெற்கு எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

முற்றுகையினால் எரிபொருள், மருந்து மற்றும் பிற முக்கிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் நாட்டிற்குள் நுழைவது தடைபட்டது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தியது. அப்போதைய பிரதமர் ஒலி ஐ.நா உட்பட சர்வதேச அளவில் இந்தப் பிரச்னையை எழுப்பினார்.

Nepal Blockade

முற்றுகைக்கு காரணம்

நேபாளத்தில் அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, பல அரசியல், இன, பிராந்திய பிரிவுகள் இடையே நீண்ட விவாதங்கள் நடந்தன.

சில இனக்குழுக்கள், குறிப்பாக மதேசிகள் (Madhesis) மற்றும் பிற சிறுபான்மையினர், புதிய அரசியலமைப்பு தங்களை புறக்கணித்ததாக குற்றம்சாட்டினர். இது 2015ல் இந்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மறியல் (blockade) க்கு வழிவகுத்தது.

மதேசிகள் இந்தியர்களுடன் கலாசார மற்றும் குடும்ப உறவுகளைக் கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் இந்தியா முற்றுகைக்கு உதவுவதாக கூறப்பட்டது.

முற்றுகையின் விளைவுகள்

தற்போதைய அறிக்கையில் இந்தியாவின் பெயரை வெளிப்படையாகக் கூறாத ஒலி, 2015 முற்றுகை நேபாளத்தின் வெளியுறவு கொள்கைகளில் திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறினார்.

அதன் பிறகு யாரும் நேபாளத்தை முடக்க முடியாதபடி, வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் போக்குவரத்துக் கட்டமைப்புகள் கட்டப்பட்டதாகவும், வடக்கு அண்டை நாட்டுடன் போக்குவரத்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறினார். சீனாவுடனான 2016 போக்குவரத்து ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இதைத் தெரிவித்துள்ளார்.

KP Sharma Oli with Xi Jin Ping
KP Sharma Oli with Xi Jin Ping

இந்த நடவடிக்கைகளால் ஒரே ஒரு அண்டை நாட்டை (இந்தியா) சார்ந்திருக்கும் நிலை மாறியதாகவும், வெளிப்புற அழுத்தத்தால் நேபாளத்தின் சுதந்திரம் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இந்தியாவின் மீதான குற்றச்சாட்டை மீண்டும் நினைவுகூறுவதன் மூலம் தேச ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஒலி.

“போராட்டக்காரர்களை சுட அரசாங்கம் உத்தரவிடவில்லை”

நேபாளத்தில் இளைஞர் போராட்டம் கே.பி.சர்மா ஒலியை பதவியிலிருந்து தூக்கி எறிந்த பிறகு, இந்த அறிக்கை வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. போராட்டங்களின்போது, ​​ஒலி ராணுவ முகாம்களில் இருந்தார். ஒன்பது நாள்கள் ராணுவப் பாதுகாப்பில் கழித்த பின்னர் வியாழக்கிழமை (செப் 18) அவர் ஒரு தனியார் இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

தனது அறிக்கையில் மக்களின் போராடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டவர், ‘சதிகாரர்கள்’ ஊடுருவியதாக கண்டனம் தெரிவித்தார். 70க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களின் மரணத்தைக் குறிப்பிட்டு, “அமைதியாக நடக்க வேண்டிய GenZ இன ஆர்ப்பாட்டத்தின் போது ஊடுருவல் நடந்தது… அதில் ஊடுருவிய சதிகாரர்கள் வன்முறையைத் தூண்டி, எங்கள் இளைஞர்களைக் கொன்றனர்” என எழுதியுள்ளார்.

மேலும், “போராட்டக்காரர்களை சுட அரசாங்கம் உத்தரவிடவில்லை. காவல்துறையிடம் இல்லாத தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு சுட்ட சம்பவம் விசாரிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்த பிறகு சிங்கா தர்பார் எரிக்கப்பட்டது, நேபாள வரைபடம் எரிக்கப்பட்டது, நாட்டின் அடையாளத்தை அழிக்க முயற்சி நடந்தது… மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகள், நீதிமன்றங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், அவற்றின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகள், தனிப்பட்ட சொத்துக்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளன.” எனக் கூறியதன்மூலம் வெளிப்புற சக்திகள் நாட்டின் அடையாளத்தை அழிக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

போராட்டத்துக்குப் பின்னால் சதித்திட்டம் இருப்பதாகவும், காலப்போக்கில் பல விஷயங்கள் வெளிப்படும் என்றும் எழுதியுள்ளவர், “நாம் கேட்க வேண்டும்: நமது தேசம் கட்டமைக்கப்படுகிறதா, அல்லது தகர்க்கப்படுகிறதா? இது ஒரு பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும் கதையால் ஊதிப் பெருக்கப்பட்ட சீற்றமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அனைத்து தரப்பினரும் இணைந்து அரசியலமைப்பைக் காக்க ஒன்றுபட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார் அவர். “இறையாண்மை நமது இருப்பு என்றால், அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் கேடயம்.” என்றவர், இன்றைய நிலையின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நேபாளத்தின் இறையாண்மை வரலாற்றில் மட்டுமே இருக்கும் என எச்சரிக்கை செய்து அறிக்கையை நிறைவு செரய்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *