
ராசிபுரம்: “பிங்க் கலர் பேருந்து என்ன நிலையில் இருக்கிறதோ, அதே கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் இன்று ராசிபுரம் ஆத்தூர் சாலையில், அண்ணா சிலை அருகே மக்கள் மத்தியில் பேசியது: “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே திமுகவால் தமிழகம் தலைகுனிந்துவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தனர். திமுக மத்திய அமைச்சர்களால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.