
சென்னை: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தால் 300 ஆண்டுகள் பழமையான 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தேசிய ஆவணக் காப்பகம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மன்றம் சார்பில் 50-வது தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழுக் கூட்டம் (பொன்விழா) சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், தியாகங்கள்’, ‘மைசூர் போர்களும், தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்’ ஆகிய 2 ஆங்கில நூல்களை அவர் வெளியிட்டார். மக்கள் வசதிக்காக பழமையான ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.digitamilnaduarchives.tn.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.