
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் ரோபோ சங்கரின் மறைவிற்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” அன்புத் தோழர், மக்களைச் சிரிப்பிலும் சிந்தனையிலும் மூழ்கடித்த திறமைசாலி நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு என் இதயத்தைக் கனமாக்கியது.
‘இரும்புத்திரை’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய படங்களில் அவருடன் சேர்ந்து நடித்த நினைவுகள் மறக்க முடியாதவை. அவர் காமெடியில் அனைவரையும் மகிழ வைப்பது மட்டுமல்லாமல், அவர் கலை மீது கொண்ட அன்பும், நடிப்பை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்பு கொண்ட நல்ல மனிதர்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தாலே அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி இயற்கையாக வந்துவிடும். மேலும், சக நடிகர்களை மதிக்கும் தன்மை, அனைவரையும் தன் நண்பராகக் கருதும் குணம் கொண்டவர். ரோபோ சங்கர் அவர்களின் திரையுலகப் பயணம் எளிதானதல்ல.
மேடை நிகழ்ச்சியில் தொடங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனித்துவத்தை நிலைநிறுத்தி, இன்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பெரிய படங்களில் இடம்பிடித்தது அவரின் கடின உழைப்பின் சான்று. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் தன் முயற்சியாலும் திறமையாலும் ரசிகர்களின் இதயத்தில் நிலைத்தவர்.

அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் வாழ்க்கையின் அழகான தருணங்களாகவே என்றும் நினைவில் நிற்கும். திரையுலகம் ஒரு சிறந்த நடிகரையும், நாம் அனைவரும் ஒரு நல்ல மனிதரையும் இழந்துவிட்டோம்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…