• September 19, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, எந்த மாதிரி பயிற்சிகள் செய்வோர் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும்?யாரெல்லாம் தவிர்க்க வேண்டும், வே புரோட்டீன் என்பது எல்லோருக்கும் ஏற்றதா, இது தவிர்த்து வேறு என்ன புரோட்டீன் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

புரோட்டீன் பவுடர் அல்லது சப்ளிமென்ட் என்பது எல்லோருக்கும் தேவைப்படுவதில்லை. ஒருவருடைய தினசரி உணவுத்தேவையே அதைப் பூர்த்தி செய்துவிடும் பட்சத்தில் தனியே புரோட்டீன் பவுடரோ, சப்ளிமென்ட்டோ அவசியமில்லை.

அதாவது ஒருவரது தினசரி உணவில் சிக்கன், முட்டை, மீன், பருப்பு வகைகள், டோஃபு போன்றவை  போதுமான அளவு இடம்பெற்றால், புரதக் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை.

உணவுகள் தாண்டி, புரோட்டீன் சப்ளிமென்ட்டும் எடுக்க வேண்டாம். சிலருக்கு  சரியான நேரத்துக்கு, சரியாகச் சாப்பிட முடியாமல் போகலாம்.

சாப்பிடாமலேயே இருப்பதற்கு பதில், புரோட்டீன் பவுடர் குடிப்பது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.  அதேபோல சைவ உணவுக்காரர்கள், வீகன் உணவுப்பழக்கமுள்ளோருக்கெல்லாம் உணவின் மூலம் போதுமான புரோட்டீன் கிடைக்காதபோதும், புரோட்டீன் பவுடர் உதவும். பாடி பில்டர்களுக்கும் இது அவசியமாகலாம். 

வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?

ரெகுலராக ஜிம் செல்பவர்களுக்கு, மஸுல் பில்டிங் செய்வோருக்கு, கொழுப்பைக் குறைத்து, தசை அடர்த்தியைத் தக்கவைக்க நினைப்போருக்கெல்லாம் வே புரோட்டீன் தேவைப்படலாம்.

ஏதேனும் உடல்நலக் கோளாறிலிருந்து மீண்டவர்களுக்கும், அடிபட்டு குணமானவர்களுக்கும் இந்தப் புரதம் நிச்சயம் உதவியாக இருக்கும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு புரதத் தேவை குறைவாகவே இருக்கும் என்பதால் அவர்கள் இவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

வே புரோட்டீன் என்பது பாலில் இருந்து பெறப்படுவது. எனவே, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனப்படும் பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வே புரோட்டீனை பரிந்துரைக்க மாட்டோம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே, எந்தவிதமான புரோட்டீன் சப்ளிமென்ட்டையும் எடுத்துக்கொள்வது சிறந்தது.

புரோட்டீன்

பச்சைப் பட்டாணியிலிருந்து பெறப்படும்  Pea protein        இவர்களுக்கான சிறந்த மாற்றாக இருக்கும். அதே போல ஹெம்ப் புரோட்டீன், சோயா புரோட்டீன் என  நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. 

அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் உணவின் மூலமே போதுமான புரோட்டீன் கிடைத்துவிடும். சைவ உணவுக்காரர்களுக்கு புரத உணவுகளே இல்லை என அர்த்தமல்ல. பருப்பு வகைகள், பனீர், டோஃபு என புரதம் அதிகமுள்ள உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *