
சேலம்: ‘டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, காரில் கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தது குற்றமா? தேவையின்றி இதை அரசியல் ஆக்குகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 16-ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு சென்றேன். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். தமிழகத்தில் நான் மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து விசாரித்தார். அவரை சந்தித்துவிட்டு காரில் வெளியே வரும்போது முகத்தை துடைத்தது குற்றமா? இதை தேவையின்றி அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. நான் முகத்தை மூடியபடி வந்ததாக சில ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.